புதுதில்லி, ஜூலை.24: நாடாளுமன்றத்தில் வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அமர்சிங்கிடம் தில்லி போலீசார் விசாரணை நடத்தியது நியாயமற்றது என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள அவருக்கு உதவப் போவதாகவும் முலாயம் சிங் தெரிவித்தார்.
எனினும் அமர்சிங் மீண்டும் கட்சிக்குத் திரும்ப உள்ளதாகக் கூறப்படுவதை முலாயம் சிங் மறுத்தார்.
அமர்சிங்குக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. சமாஜவாதிக் கட்சி எம்பி ரேவதி ரமண் சிங் மற்றும் அமர்சிங்கை சிக்கவைக்க சதி நடந்துள்ளது. 2008 நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக சமாஜவாதி வாக்களிக்க வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அமர்சிங் உதவிசெய்துள்ளார். இப்போது அவரிடம் விசாரணை நடைபெறுகிறது என முலாயம் சிங் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்து நாங்கள் உதவி மட்டுமே செய்தோம். அரசில் நாங்கள் இணைந்தோமா? அமர்சிங்கோ அல்லது ரேவதி சிங்கோ அமைச்சர்கள் ஆனார்களா? பணம் கைமாறியிருந்தால் அது எனக்குத் தெரியாமல் இருக்காது என முலாயம் சிங் யாதவ் குறிப்பிட்டார்