ஹைதராபாத், ஜூலை.24: ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 101 தெலங்கானா எம்எல்ஏக்கள் அளித்திருந்த ராஜிநாமா கடிதங்களை அந்த மாநில பேரவைத் தலைவர் நாதெந்தலா மனோகர் நிராகரித்தார்.
காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக லண்டன் புறப்படுவதற்கு முன்பு, எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் நிராகரித்தார். உணர்ச்சிவேகத்தில் இந்த ராஜிநாமா கடிதங்களை அவர்கள் அளித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
எம்எல்ஏக்கள் ராஜிநாமா நிராகரிக்கப்பட்டதால், இதே காரணங்களுக்காக ராஜிநாமா செய்த தெலங்கானா எம்பிக்களின் ராஜிநாமாவையும் மக்களவைத் தலைவர் நிராகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
முன்னதாக தனித் தெலங்கானா விவகாரத்தில் விரைந்து அறிவிப்பு வெளியிடக் கோரி ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் தெலங்கானாவைச் சேர்ந்த 101 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.