பண்ருட்டி, ஜூலை 24: திமுகவை யாராலும் அழிக்க முடியாது உண்மைதான், கருணாநிதியும், அவரது குடும்பத்தினரையும் தவிர வேறு யாராலும் திமுகவை அழிக்க முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மேலும் பேசிதாவது:
அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பொதுவானவர்கள், அவர்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம், முடிந்தவரை நல்லது செய்யுங்கள், நல்லது செய்ய முடியவில்லை என்றால் கெடுதல் செய்யாதீர்கள்.
இந்தியாவில் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது, 2ஜி வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆனால் ஊழல் புரிந்தவர்களுக்கு தமிழக மக்கள் தண்டனை அளித்துள்ளனர் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் கூறியது:
சமச்சீர் கல்வி வழக்கு உச்சநீதிமன்றத்தில் 26-ம் தேதி விசாரணை நடக்க உள்ளது. ஏற்கெனவே பாடத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி சமச்சீர் பாடதிட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பது தவறு இல்லை.
குறைகளை நீக்கி - சேர்க்க வேண்டியதை சேர்த்து பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இருப்பினும் தமிழக அரசு 26-ம் தேதி வரையில் காத்திருப்பது அர்த்தமுள்ளதே என்றார்.