பெங்களூர், ஜூலை.24: லோக்ஆயுக்த அறிக்கையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவதால் அவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பாஜகவுக்குள்ளேயே அவர் பதவிவிலக வேண்டும் என்று பலரும் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சாந்தகுமார் கட்சித் தலைவர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எடியூரப்பாவை டிஸ்மிஸ் செய்யக்கோரி ஆளுநர் பரத்வாஜை சந்தித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் மனு அளித்துள்ளனர்.
முன்னதாக லோக்ஆயுக்தவின் அறிக்கை தன்னிடம் அளிக்கப்பட்டபிறகு, அதன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பரத்வாஜ் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதனிடையே விடுமுறைக்காக மொரீஷியஸ் சென்ற எடியூரப்பா இன்று இரவு பெங்களூர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.