மேலும் 5 மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம்: முதல்வர் அறிவிப்பு

கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தை திட்டம் விரிவுபடுத்தப்படும் ...
மேலும் 5 மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டம்: முதல்வர் அறிவிப்பு
Published on
Updated on
2 min read

சென்னை, ஜூலை. 24: கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் போதெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல புதுமையான முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறேன்.

அவ்வாறு என்னுடைய எண்ணத்தில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம்.

2001 ஆம் ஆண்டு, இரண்டாம் முறையாக நான் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற போது, தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. பெண் சிசுக் கொலை நடைமுறையிலிருந்த, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குழந்தை வரவேற்பு மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வரவேற்பு மையங்களில் போதிய அளவு பணியாளர்கள், வெப்ப அளிப்பான் கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள், குளிர்சாதன பெட்டிகள், எரிவாயு அடுப்பு இணைப்பு, அத்தியாவசிய பாத்திரங்கள், குழந்தை படுக்கை விரிப்பான்கள், குழந்தைகளைத் துடைப்பதற்கான குட்டைத் துணிகள், பாலூட்டும் பாட்டில்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தொலைபேசி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டன.   

மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் 188 தொட்டில் மையங்கள் தொடங்கப்பட்டன.

இத்தன்னிகரில்லாத் திட்டத்தின் கீழ் இதுவரை 3200-க்கும் அதிகமான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதோடு, 582 ஆண் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மகத்தான நோக்கத்திற்கேற்ப, 2088 பெண் குழந்தைகள் மற்றும் 372 ஆண் குழந்தைகள் என மொத்தம் 2460 குழந்தைகள் உள்நாட்டில் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். 170 பெண் குழந்தைகள் மற்றும் 27 ஆண் குழந்தைகள் என மொத்தம் 197 குழந்தைகள் வெளிநாட்டில் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 13 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகள் என மொத்தம் 18 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகையில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்று இருந்த குழந்தை பாலின விகிதம், 2011 ஆம் ஆண்டில் 946 ஆக உயர்ந்துள்ளது.  

எனினும், 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதத்தில் பெண் குழந்தை விகிதம் கவலையளிக்கத் தக்க வகையில் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது மற்றும் பெண் சிசுக் கொலை எனக் கருதப்படுகிறது.   

எனவே, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் தொட்டில் குழந்தை திட்டத்தை விரிவுபடுத்த நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி, இந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தை வரவேற்பு மையங்கள் தொடங்கப்படும். இம்மையங்களில், மேற்பார்வையாளர், துணை மருத்துவச் செவிலியர் மற்றும் உதவியாளர் போன்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இம்மையங்களில் குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், மருந்துகள் மற்றும் துணிகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்படும். இம்மையங்கள் 47.45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இந்த ஐந்து மாவட்டங்களிலும், பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் இல்லம் மற்றும் காப்பகங்கள் ஆகிய இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படும். இம்மாநிலத்திலிருந்து பெண் சிசுக் கொலையை அடியோடு ஒழித்து, பெண் குழந்தைகளின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், பெண்களின் உரிமைகளை நிலை நாட்டவும் வழிவகுக்கும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில், பொதுமக்களும், பெண் குழந்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.