சென்னை, ஜூலை. 31: தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், கால்வாய்களை சீரமைக்க ரூ 22 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வேளாண்மைத் தொழிலையே நம்பி இருப்பதால், வேளாண் பெருமக்கள் வாழ்வில் வளம் பெறவும், அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கவும், வேளாண் உற்பத்தித்திறனையும், வேளாண் பெருமக்களின் வருமானத்தையும் அதிகப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
நீடித்த வேளாண் வளர்ச்சியானது சரியான அளவு நீரினைப் பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இதனை அடைந்திட, பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாகக் கிடைத்திடும் வகையில், நீர்வள அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்தல் அவசியமாகிறது.
அந்த வகையில், மாநிலத்தில் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்தி, பாசனக் கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்து அவைகளை பழைய நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன், உலக வங்கி உதவியுடன் நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் முந்தைய ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
நீர்வள ஆதார தொகுப்புத் திட்டத்தின் தொடர் திட்டமாக, தமிழகத்தில் உப வடிநில கட்டமைப்பு முறையில், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மை மூலம் பாசன சேவை மற்றும் பாசன வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 2547 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, வேலூர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகள் மற்றும் நீர் வழங்கு கால்வாய்களை 22 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்திட முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார்.
கூவம் வடிநிலம் கிராமப் பகுதி மற்றும் நகரப்பகுதி என இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நகரப் பகுதி சென்னை மாநகர எல்லைக்குட்பட்டது. கூவம் வடிநிலத்தில் 80 முறைசார்ந்த மற்றும் முறைசாரா பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் பாசனப் பரப்பு கொண்ட 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்களை புனரமைத்து நவீனமயமாக்க இத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மதகுகளை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் சீர்படுத்துதல், சிற்றணைகளை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் சீர்படுத்துதல், ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், நீர்வழங்கு கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களிலுள்ள 54 முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள 6624.20 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.