Enable Javscript for better performance
அண்ணா பிறந்தநாளில் கோயில்களில் சமபந்தி போஜனம்: அரசுக்கு ராம.கோபாலன் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா பிறந்தநாளில் கோயில்களில் சமபந்தி போஜனம்: அரசுக்கு ராம.கோபாலன் கண்டனம்

    Published on : 20th September 2012 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramgobalan

    சென்னை, செப்.15: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளில் கோயில்களில் சமபந்தி போஜனம் செய்வதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை...

    தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு திட்டங்கள் கொண்டு வருவதையும், அதனைச் செயல்படுத்துவதில் கண்ணும் கத்துமாக இருந்து வருவதையும் வரவேற்கிறோம். இத்தகைய நடவடிக்கைகளால் தமிழகம் வளம் பெறும், நலம் பெறும். ஆலயம் தோறும் அன்னதானம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழை எளிய மக்களுக்கு பசு மாடுகள், ஆடுகள் என ஏழைகள் ஏற்றம் பெற உதவும் முதல்வரின் நற்செயல் வெற்றிபெறட்டும்.

    அதேநேரம், இன்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாள். இந்த விழாவின் ஒரு பகுதியாக இந்து ஆலயங்களில் சமபந்தி போஜனம் போடுவது என்பது ஏற்கமுடியாது, இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணாதுரை ஆழ்வாரோ, நாயன்மாரோ அல்லது இறையடியாரோ இல்லை. அவர் வாழ்நாள் எல்லாம் இறை நம்பிக்கைக்கு எதிராக நாத்திகம் பேசியவர். அவரது பிறந்தநாள், நினைவுநாளில் சமபந்தி போஜன விழாவை முன்னாள் முதல்வர் கருணாநிதி தந்திரமாக இந்துக் கோவில்களின் தலையில் கட்டி, ஆலயத்தில் நாத்திகத் தலைவருக்கு விழா எடுக்க வைத்தார், இதனை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

    அண்ணாதுரைக்கு திவசம் செய்வதானால் அதன் செலவை அவரால் உருவான, அவரது புகழ்பாடும் கழகங்களோ, அவரால் பயனடைந்தவர்களோ ஏற்க

    முன்வரட்டும், அதற்கு பதில் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, இந்து ஆலயங்கள் அரசின் பிடியில் இருப்பதால் அதிலிருந்து செலவு செய்வது அடாவடியானது.

    அவரது பிறந்த நாள், இறந்த நாளுக்கு ஆலயத்திலிருந்து ஏன் செலவு செய்ய வேண்டும்? இத்தகைய விழாக்களை ஆலயத்தின் மீது திணிப்பதைக் கைவிட முதல்வரை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai