சென்னை, பிப்.11: சென்னை கோயம்பேடு பகுதியில் அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க. இடையே சுவரொட்டி ஓட்டுவதில் சனிக்கிழமை தகராறு ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பும் காவல் நிலையத்தில் புகார் செய்தன.
இது குறித்து போலீஸார் தெரிவித்தது...
தமிழக சட்டப்பேரவையில் அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே மோதல் ஏற்பட்ட பின்னர், இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சில நாள்களாக சென்னையில் சில இடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை விமர்சிக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஓட்டினர்.
இந்த சுவரொட்டியில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் விமர்ச்சிக்கப்பட்டிருந்தனர். இது அக்கட்சியினரிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் தமிழக முதல்வரையும், அ.தி.மு.க. கட்சியையும் விமர்சித்து கோயம்பேடு, சாலிகிராமம், சின்மயாநகர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. இதனால் அப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் பார்த்த 129வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில்பாண்டியன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். இதில் சின்மயாநகர் பகுதியில் அதிமுக தொண்டர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது.
இது குறிóத்து தே.மு.தி.க.வின் மாவட்ட நிர்வாகி வி.என்.ராஜன், அ.தி.மு.க.வினர் தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதேபோல அ.தி.மு.க. சார்பில் செந்தில்பாண்டியன், தே.மு.தி.க.வினர் முதல்வர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையிலும், களங்கப்படுத்தும் வகையில் சுவரொட்டி ஓட்டியதாகப் புகார் செய்தார். இந்த இரு புகார்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.