இஸ்லாமாபாத், பிப்.11: மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 7 பேர் மீதான வழக்கு விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது பாகிஸ்தான் நீதிமன்றம்.
பாகிஸ்தானின் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞர் சவுத்ரி ஜுலிப்கர் அலி "பாகிஸ்தான் நீதிக்குழு இந்தியா சென்று விசாரணை நடத்துவதற்கான புதிய தேதியை பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதுதொடர்பாக இந்தியாவின் பதிலுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி சாஹித் ரபிக் வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.