சேலம், பிப்.11: சேலம் கொல்லப்பட்டியில் அமைந்துள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பயிலும் கடைசி வருட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சனிக்கிழமை இரவு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் கல்லூரியில் ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், திடீரென கல்லூரிக்கு வந்து அவர்கள் தங்களைத் தாக்குவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையும் கல்லூரி வளாகத்துக்குள் கிரிக்கெட் விளையாடும் சாக்கில் உள்ளே வந்த ரவுடிகள், கடைசி வருட மாணவர்கள் 5 பேரை ஸ்டெம்ப், கிரிக்கெட் பேட் உள்ளிட்டவைகளைக் கொண்டு தாக்கியதாகவும், இதனால் காயமடைந்த அந்த மாணவர்கள் அரசு பொதுமருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது. இதை அடுத்து, தங்கள் கல்லூரியில் ரவுடிகள் தொல்லை அதிகரித்திருப்பதைக் கண்டித்தும், உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சுமார் 100 மருத்துவக்கல்லூரி மாணவர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.