மாற்றுத்திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செய்தவை : கருணாநிதி பட்டியல்

மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சலுகைகளையெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி பட்டியல் இட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செய்தவை : கருணாநிதி பட்டியல்

மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சலுகைகளையெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி பட்டியல் இட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று ஏராளமான மாற்றுத் திறனாளிகள் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது, அவர்கள் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்த போது மாற்றுத் திறனாளிகளுக்காக அளித்த சலுகைகளையெல்லாம் தொகுத்து நான் எழுதி அனைவருக்கும் நினைவூட்டிட வேண்டுமென்ற  வேண்டுகோளினைத் தெரிவித்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கிணங்க அந்த விவரங்களைத் தந்துள்ளேன்.

ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் இருந்த போது, தமிழகத்தில் இனி “ஊன முற்றோர்” என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள், “மாற்றுத் திறனாளிகள்” என அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

2010 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் “மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்” என அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. 2010-2011இல் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கெனப் பேரவையில் தனியே, “மானியக் கோரிக்கை” அளிக்கப் பட்டு, அதன்மீது மாற்றுத் திறனாளிகள் நலம் குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

1969 இல் உருவாக்கிய “தொழுநோய் இரவலர்கள் மறுவாழ்வுத் திட்டம்” அண்ணல் காந்தி அடிகள் பிறந்த அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் 1971ல் காஞ்சிபுரம் மாவட்டம் பரனூரில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 9 இடங்களில் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு இன்றும் அவை செயல்பட்டு வருகின்றன.

1972 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாம்களில் இலட்சக் கணக்கான ஏழை எளியவர்களுக்குக் கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, கண்ணாடிகளும் இலவசமாக அணிவிக்கப்பட்டன.

1974 ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு; கை, கால் இழந்தவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், அலுமினியத் தாங்கிகள்

(ஊசரவஉhநள), பார்வை பழுதானவர்களுக்குக் கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், செவித்திறன் குறையுடை யோர்க்குக் காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

1974 முதல் ஆதரவற்ற மாற்றுத் திறனாளி களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2010இல் ரூபாய் 500 எனக் கழக அரசினால் ஓய்வூதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டது.

1989-1990 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரிகள் மனிதநேய அடிப்படையில் முற்றிலும் நீக்கப்பட்டன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன.

தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 50 ஆயிரத்து 609 மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பயன் பெற்றார்கள்.

இந்தியாவிலேயே முதன் முறையாக தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 1000 பேருக்கு மாதம் 500 ரூபாய் வீதம் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், காதுகேளாத, வாய் பேசாதவர்களை மணம் செய்துகொள்ளும் உடற்குறை இல்லாதவர்களுக்கும்; ஒரு கை அல்லது கால் இழந்தோரைத் திருமணம் செய்து கொள்ளும் உடற்குறை இல்லாதவர்களுக்கும் நிதியுதவி வழங்கும் திட்டம், மாற்றுத் திறனாளியை இன்னொரு மாற்றுத் திறனாளி திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கழக அரசு 2009-2010ஆம் ஆண்டு முதல் தொடங்கிச் செயல்படுத்தியது.

இந்தியாவிலேயே முதன்முறையாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உட்பட 2700 பேருக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 1997இல் 100 கி.மீ. தூரம் வரை பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோர் இலவசப் பேருந்துப் பயணச் சலுகைத் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது.

பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோர் / கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் அரசு விரைவுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர இலவசப் பயண

அனுமதி வழங்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் தமது உதவியாளர் ஒருவருடன் அரசுப் பேருந்துகளில் இலவசமாகச் சென்று வர பயணச்சலுகை வழங்கப்பட்டது.

மனவளர்ச்சி குன்றியோரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய பயிற்சிகள் அளிக்க மாவட்டந்தோறும் ஒரு பயிற்சி மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

பட்டமேற்படிப்பு வரை பயிலும் மாற்றுத் திறனு டைய மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில / மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்க்கு ரொக்கப் பரிசும், உயர்கல்வி பெற உதவித்தொகையும் 2006-2007ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது. அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் டிசம்பர் 3ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடு வதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க அரசு ஆணை 2007ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

சமூகநலத் துறை அமைச்சர் தலைமையில், மூன்று அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் 15 அலுவல் சாராதவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் 2007ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளை - ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் - மனதார நேசித்துப் போற்றி வருபவன் நான். எனினும் மாற்றுத் திறனாளிகளுக்கு நான் எதுவும் செய்யவில்லை என அறிக்கை வெளியிடுவோர் - உண்மைகளை அறியாதவர்கள் அல்லது உண்மைகளை மறைத்திட முயற்சிப்பவர்கள். பாவேந்தரின் கூற்றுப்படி “காரிருளால் சூரியன் தான் மறைவதுண்டோ?” - போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com