ஈழத் தமிழர்கள் மீது பொய் வழக்குப்போடுவது மனிதாபிமானமற்ற செயல் : வைகோ
By dn | Published On : 21st December 2012 12:08 PM | Last Updated : 21st December 2012 12:08 PM | அ+அ அ- |

இலங்கையில்,மரண வேதனைகளைச் சுமந்து, தாய்த் தமிழகத்தில் ஆறுதலும் அன்பான அரவணைப்பும் தேடி வந்த, ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்து, தமிழ் இனப் படுகொலைக்கு துணை நின்ற மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்காகவே, பொய்யான காரணங்களைச் சொல்லி வருகிறது. அதற்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக காவல்துறை கியூ பிரிவு போலிசார் ஈழத் தமிழ் இளைஞர்களை, விடுதலைப்புலிகள் என்று குற்றம்சாட்டி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வழக்குப் பதிந்து, அவர்களை சிறையில் அடைக்கிறது.
தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர், சென்னை பல்லாவரம்-பொழிச்சலூர் அருகே இப்படி கைது செய்யப்பட்ட நான்கு ஈழத் தமிழர்களில் மகேஸ்வரன் என்ற இளைஞர் இடுப்புக்குக் கீழ் கால்கள் இயங்கமுடியாத துன்பத்தில் இருப்பவர். காவல்துறை வழக்கம்போல, கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்தி, காவல்துறையினரே தயாரித்த வாக்குமூலத்தை, கைதானவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் என்று அறிவிக்கிறது. இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகாது.
இலங்கையில் சிங்கள இராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலால், படுகொலைகளால், வீடு வாசல், சொந்த உறவுகள் அனைத்தையும் இழந்து, கண்ணீரில் துடிதுடித்து நிழல் தேடி, தாய்த் தமிழகத்துக்கு வருகின்ற ஈழத்தமிழர்களை இப்படிப் பொய்வழக்குப்போட்டு சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். கண்டனத்துக்கு உரியதாகும்.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, உதயதாஸ், சுரேஷ்குமார் ஆகிய நால்வரையும் தமிழக அரசு, மனிதநேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.