முகப்பு தற்போதைய செய்திகள்
டெசோ மாநாடு ஏன்? கருணாநிதி புது விளக்கம்
By | Published On : 11th July 2012 10:15 PM | Last Updated : 19th September 2012 10:48 PM | அ+அ அ- |

சென்னை, ஜூலை 11: டெசோ மாநாடு ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று புதுவிளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
"இலங்கையில் தொடரும் அநீதி - இங்கே, இன்னுமா சாதி?” என்ற தலைப்பில் வழக்கம் போல் அவர் வெளியிடும் அவரே கேள்வி கேட்டு அதற்கு பதில் அளிக்கும் கேள்வி-பதில் அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
'2013ஆம் ஆண்டு செப்டம் பரில் இலங்கை வடக்குப் பகுதியில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே சொல்லியிருக்கிறாரே?" என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்:
"ஆனால் தேர்தல் நடை முறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப்புலிகள்; பூசாமுகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டி விட்டனர். இதனால் வவுனியாசிறையில் கடந்த மாதம் 30ஆம் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்துவவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும், அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் உடலை வவுனியாவில் தகனம் செய்யப் போவதாகக் கூறினர். ஆனால் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்குக்கூட அனுமதி மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிமலரூபனின் உடலை தகனம் செய்துவிட்டார்களாம். நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையிலே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது, மாபாதகம் அல்லவா? இதற் கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற் காகத்தான் “டெசோ” மாநாடு நடைபெறுகிறது.
- இவ்வாறு புதிய விளக்கத்தை அளித்துள்ளார் கருணாநிதி.
மேலும், அதைத் தொடர்ந்த கேள்வியில்,
“தீண்டாமை” அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே “தலித்”களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாகச் சொல்லப்படுகிறதே?
என்று கேள்வி கேட்டு அதற்கான பதிலாக,
"அண்மையில் ஒரு செய்தி படித்தேன். திருவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால்,வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிடக் கொடுமை, வேற்றுச் சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?
- என்று கூறியுள்ளார்.