Enable Javscript for better performance
கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவை தங்கச் சுரங்கங்களில் கொட்டுவதற்கு எதிர்ப்பு: கோலார் தங்கவயலில் இன்று முழு அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவை தங்கச் சுரங்கங்களில் கொட்டுவதற்கு எதிர்ப்பு: கோலார் தங்கவயலில் இன்று முழு அடைப்பு

    By dn  |   Published on : 23rd November 2012 05:19 AM  |   அ+அ அ-   |    |  

    கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணுமின் நிலையத்தின் அணுக் கழிவை மூடிக்கிடக்கும் தங்கச் சுரங்கங்களில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோலார் தங்கவயலில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன.

    தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டிசம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

    அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் அருகேயுள்ள கடலில் கொட்டமாட்டோம். மாறாக, கோலார் தங்கவயலில் அமைந்துள்ள மூடிக்கிடக்கும் தங்கச் சுரங்கங்களில் கொட்டப்படும் என்று மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கு கோலார் தங்கவயல் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்கச் சுரங்கங்களில் அணுக்கழிவைக் கொட்டுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று கோலார் தங்கவயல் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஒய்.சம்பங்கி தெரிவித்தார். இதே கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ.வும், மஜத தலைவருமான மு.பக்தவத்சலம், இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், மூடிக்கிடக்கும் தங்கச் சுரங்கங்களில் அணுக்கழிவைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று கோலார் தங்கவயலில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு பாஜக, மஜத, இந்திய குடியரசுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்தவ முன்னேற்ற முன்னணி, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

    தங்கவயல் தமிழ்ச் சங்கமும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    போராட்டம்: தங்கச் சுரங்கத்தில் அணுக்கழிவைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேந்திரன் தலைமையில் இந்திய குடியரசுக் கட்சியினர் நேற்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருப்பதாக ராஜேந்திரன் தெரிவித்தார். இதேபோல, தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்தவ முன்னேற்ற முன்னணி தலைவர் தாஸ் சின்னசவரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    அனுமதிக்க மாட்டோம்: கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சொகடு சிவண்ணா கூறியது: மிகவும் ஆபத்தான அணுக்கழிவை தங்கவயல் தங்கச் சுரங்கங்களில் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கமாட்டோம். மத்திய அரசின் முடிவு தன்னிச்சையானது. கோலார் தங்கவயல் தங்கச் சுரங்கங்களை அணுக்கழிவுக் கூடமாக மாற்றும் மத்திய அரசின் முடிவு குறித்து மாநில அரசுக்கு எந்தத் தகவலும் இல்லை. பத்திரிகைகள் மூலமே இதுகுறித்து அறிந்து கொண்டேன்.

    மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் அமைக்கப்படும் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவை அங்கேயே கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

    kattana sevai