வைர விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் தெரியுமா? கருணாநிதி

ஓமந்தூர் சட்டப்பேரவை வளாகத்தை மறக்கடிக்கவே வைர விழா கொண்டாடப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
வைர விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் தெரியுமா?  கருணாநிதி

ஓமந்தூர் சட்டப்பேரவை வளாகத்தை மறக்கடிக்கவே வைர விழா கொண்டாடப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவை வைர விழாவுக்கு என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை இந்தக் கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவிற்கான அழைப்பிதழை, “.மு.கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர், கோபாலபுரம்” என்று முகவரியிட்டு, அரசு சார்பில் யாரோ ஒருவர் கொண்டு வந்து என் வீட்டிலே கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். அழைப்பிதழைப் பார்த்தேன். “தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையின் வைரவிழா அழைப்பிதழ்” என்றிருந்தது. ஆனால் 1997ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி நடைபெற்றபோதே, 14-7-1997 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தின் பவள விழாவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவும் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

14-7-1997 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அவர்கள் தலைமையில் என்னுடைய முன்னிலையில் விழா நடைபெற்றது.

1919ஆம் ஆண்டில் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

அந்நாளைய மாகாண சட்டமன்றங்களில் முதன்முதலாக இடம் பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின்னர் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்கு வழிகோலியது.

அந்தச் சட்டத்தின்படி சென்னை மாகாண மன்றத்திற்கு 1920ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் நிகழ்ந்த முதல் பொதுத் தேர்தலில் நீதிக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி  சுப்பராயலு ரெட்டி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது.

1921ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் பன்னிரெண்டாம் நாள் கன்னாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சிச் சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்படி, 75 ஆண்டுகள் முடிந்ததையொட்டித்தான், அதன் பவள விழா நிகழ்ச்சியும், அதேபோல 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக 1937ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்றப் பேரவையின் அறுபதாண்டுகள் நிறைவையொட்டி வைர விழா நிகழ்ச்சியும் இணைக்கப்பட்டுத் தான் 14-7-1997 அன்று மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.

எனவே சட்டமன்றப் பவள விழாவும், பேரவை வைர விழாவும் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது எப்படியாவது ஒரு விழாவினை நடத்த வேண்டும்

என்பதற்காக வழி என்ன என்று பார்த்து, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, குடியரசு பெற்ற பிறகு, 1952ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது என்பதைக் கூறி,

அது முதல் கணக்கிட்டால் அறுபதாண்டுகள் என்பதால் வைர விழா வினை நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். விழா சிறப்பாக நடக்கட்டும்.

ஆனால் திடீரென்று இந்த ஆட்சியில் இப்படியொரு வைர விழா கொண்டாடுவதற்கான உண்மை யான காரணம் என்ன தெரியுமா? தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்கி, அங்கே நிதிநிலை கூட்டத் தொடர் உட்பட ஒரு சில சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெற்று, தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் புதிய அத்தியாயம் நிலை

பெற்ற பிறகும், தலைமைச் செயலகமும், சட்டப் பேரவையும் நிரந்தரமாக அங்கேயே அதாவது ஓமந்தூரார் வளாகத்திலேயே அமைந்து விடக் கூடாது என்பதற்காகத்தான், வைரவிழா வளைவு, வைர விழா போன்றவைகளை திடீரென்று நடத்த முற்பட்டுள்ளார்கள்.

மேலும், வைர விழாவில் சிறப்பு விருந்தினரான குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் 27ம் தேதிதான் அழைப்பிதழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த “இருண்ட ஆட்சி” நடத்தும் வைர விழாவில் முக்கியமான நிகழ்ச்சி, இதையொட்டி வைக்கவுள்ள வைரவிழா வளைவாகும். ஆனால் இந்த வளைவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் விழாவிலே இணைக்காமல், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மட்டும் முன்கூட்டியே முதல்வரே நடத்தி முடித்து விட்டார். அது மாத்திரமல்ல; வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன். அவரே இந்த விழாவிற்காக வந்து கலந்து கொள்கிறார். ஆனால் இந்த விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழிலும், அதன் கவரிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம்தான் இருக்கிறதே தவிர, விழாவிற்கு முக்கிய விருந்தினர்களான குடியரசுத் தலைவரின் படமோ, ஆளுநரின் படமோ இடம் பெறவில்லை என்பதும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மரபு “(ப்ரோட்ட கால்)” இந்த அளவிற்குப் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் கண்டனத்திற்குரிய செய்தியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com