சுடச்சுட

  

  சின்மயி என் மீது கொடுத்த புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்: எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

  Published on : 24th October 2012 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் இன்று வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில்,

  பாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த ரசிகர்களுக்கும், நல்லிதயங்களுக்கும் நன்றி.

  கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன்.

  கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ரிக்சா முன்சாமி, தமிழ்ப் புலவர் ஆதிமந்தி போன்ற நான் உருவாக்கிய கதாபாத்திரங்களும் புகழ்பெற்றவையே. தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்கள், அமெரிக்க டெலிவிஷனின் ‘நீயா நானா’ ஷோக்களிலும் நான் அவ்வப்போது தலை காட்டுபவன். லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணி புரிபவன். இவற்றையெல்லாம்விட, பல வருடங்களாக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் ஐடி கம்பெனிகள், ரியல் எஸ்டேட் தொழில், இந்திய சினிமாக்காரர்களுக்கு ஹாலிவுட்டில் பல விதங்களிலும் உதவி என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்..

  நகைச்சுவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு என் புத்தகங்கள், கதைகள், அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. விகடன், குமுதம், கல்கண்டு, கலைமகள், கல்கி, அமுதசுரபி போன்ற பல பத்திரிகைகளில் நான் தொடர்து எழுதி வருகிறேன். கலைமகளின் கி.வா.ஜகந்நாதன் நினைவு பரிசுப் போட்டியில் முதல் பரிசு வென்றவன்.

  ட்விட்டருக்கு நான் வருவது ஒருவித ரிலாக்சேஷனுக்காக மட்டுமே. வர்ச்சுவல் உலகத்தில் பெண்களுக்கும் பல சிறுபான்மையினருக்கும் எதிராக அவ்வப்போது நடக்கும் நிழல் யுத்தங்களைக் கண்டு நான் வெறுப்பவன். பல நேரங்களில் சண்டை போடுபவர்களை நானே கிண்டல் செய்து விலக்கிவிடுவதும் உண்டு. என் ஆயுதம் எப்போதுமே நகைச்சுவைதான்.

  என்னுடைய தளங்களுக்கு (http://losangelesram.blogspot.com http://writerlaram.com) ஒருமுறை வந்து பார்த்தாலே நான் காலை, நடுப்பகல், மாலை, இரவு என்று எந்நேரமும் நகைச்சுவையை மட்டுமே பிரதானப்படுத்தும் சாகபட்சிணி என்பதை அறிவீர்கள்!

  ட்விட்டர் என்பது இணையப் பொதுவெளியின் ஒரு அங்கம். ’என் டைம்லைனில் நீ ஏன் வருகிறாய்?’ என்று யாரையும் நாம் கேட்பதே படு அபத்தம். நமக்குப் பிடிக்காதவர்களை ‘அன்ஃபாலோ’ அல்லது ‘ப்ளாக்’ செய்துகொள்ள அதில் வசதிகள் உள்ளன. நான் இதுவரை சின்மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது. நான் அவருடைய குடும்பத்தாரால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருத்த வேதனை அளிக்கிறது.

  சில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உலகமே அல்லோல கல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை ‘சின்னாத்தா’ என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் ஒருவரை ‘ஜின்னாத்தா’ என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத்மஹாசினி எனக்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அதில் என் ‘கலக்கல் கபாலி’ படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும்(!), அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை குறிவைத்து நான் எழுதியதாகவும் என்னவெல்லாமோ சொல்லி என்னை மிரட்டிய கடிதம் மிக நீண்டது.

  “நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த ’கலக்கல் கபாலி’ கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன்படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள்” என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன். தன்னைத் தொடர்பு கொள்ளச்சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.

  நானும் ஒரு நல்ல பெண்ணைப் பெற்று வளர்ப்பவனே. சின்மயி மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுமே எங்கேயுமே அசிங்கப்படக்கூடாது என்பதில் நான் தீவிரமாகவே இருக்கிறேன். பல நேரங்களில் மன இறுக்கத்தைக் குறைக்க நகைச்சுவையை பயன்படுத்த வேண்டி இருக்கிற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். என்னால் முடிந்த அளவுக்கு நான் அதை நன்றாகவே செய்து வருகிறேன். என் மீதே புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது மனவேதனை அளிக்கிறது.

  சரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை, கலாட்டா, கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் என்னை போலீஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை. பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந்த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால் நானும் நீதி கேட்டுப் போராட வேண்டி வரும்; மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

  - இவ்வாறு எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai