யாழ். உதயன் அலுவலகத்தில் சிங்களர்கள் தாக்குதல்: வைகோ கண்டனம்

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் சிங்களர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி, அச்சு இயந்திரங்களை நொறுக்கி தீவைத்து கொளுத்திய செயலுக்கு மதிமுக
யாழ். உதயன் அலுவலகத்தில் சிங்களர்கள் தாக்குதல்: வைகோ கண்டனம்

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்தில் சிங்களர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி, அச்சு இயந்திரங்களை நொறுக்கி தீவைத்து கொளுத்திய செயலுக்கு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இன்று (ஏப்ரல் 13ஆம் தேதி) அதிகாலை  4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கியவர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி, இதே உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த யாழ்ப் பகுதி சிங்கள இராணுவத்தின் ஜெனரல் ஹத்ரு சின்கா கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர் தனிக் கூலிப்படை வைத்து அக்கிரமம் செய்வதாக முன்னாள் இலங்கைப் பிரதமர் இரணில் விக்கிரம சின்கா அண்மையில்தான் குற்றம் சாட்டினார்.

நேற்று இலங்கை நாடாளுமன்றத்திலும் இதுபற்றி குற்றம் சாட்டியுள்ளார். உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவண பவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்று நடந்த தாக்குதலை சிங்கள இராணுவத்தினரே செய்துள்ளனர். அண்மையில்தான் கிளிநொச்சியில் உள்ள  உதயன் பத்திரிகை அலுவலகம் சிங்களவர்களால் தாக்கப்பட்டது. அதுவும் இராணுவத்தினரின் வன்முறையாகவே தெரிகிறது. கிளிநொச்சி அலுவலகத்துக்கு இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கேட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுவதும் சிங்கள இராணுவத்தினுடைய கொடுஞ்செயலே ஆகும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால், தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்பதும், சிங்கள இராணுவத்தின் அராஜகம் தமிழ் ஈழத்தில் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவமும் போலிசும் முற்றாக வெளியேற்றப்பட்டாக வேண்டும். ஐ.நா. மன்றமும், அனைத்துலக நாடுகளும் அந்த நிலைமையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் உள்நாட்டுப் பத்திரிகைகளோ, தொண்டு நிறுவனங்களோ சுதந்திரமாக செயல்படவே முடியாது. மனித உரிமைகள் சிங்களவரால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதை அனைத்துலக சமுதயாம் எண்ணிப் பார்த்து, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தும் சிங்கள அரசின் இக்கொடுமை இன்னும் தொடர்வதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com