Enable Javscript for better performance
மோசடியாக நான்கு திருமணம் செய்த ராணுவ சமையல்காரர் தில்லி சிக்கினார்- Dinamani

சுடச்சுட

    

    மோசடியாக நான்கு திருமணம் செய்த ராணுவ சமையல்காரர் தில்லி சிக்கினார்

    Published on : 16th August 2013 05:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நான்கு பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ சமையல்காரர் தில்லியில் போலீஸார் பிடியில் சிக்கினார்.

    கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரேமா (33). இவர் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பிலிப் ஜோசப் (34). ராணுவத்தில் சமையல்காரராக உள்ளார். இவர் என்னை ஏமாற்றி நான்காவது திருமணம் செய்துள்ளார்.

    இதற்கு முன் கன்னியாகுமாரியைச் சேர்ந்த திவ்யா, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புஷ்பலதா (24), கணபதியைச் சேர்ந்த ரம்யா (24) ஆகியோரை மோசடியாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் அவரது தாயார் மேரி, சகோதரி உஷாவுக்குத் தொடர்புள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

    இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை அனைத்து மகளிர் கிழக்கு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் புஷ்பலதா, ரம்யா ஆகியோர் பிலிப் ஜோசப் மீது திருமண மோசடி புகார் அளித்தனர். அவர்களது புகார்கள் ஏற்கனவே பிலிப் ஜோசப் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் சேர்க்கப்பட்டன.

    பிறகு சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்ட பிலிப் ஜோசப்பின் தாயார் மேரி, சகோதரி உஷா ஆகியோர் உடனடியாக ஜாமீனில் விடப்பட்டனர்.  இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மூவரும் தங்கள் கைக்குழந்தைகளுடன் சென்னை சென்று முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து தமிழக காவல்துறை தலைமையகம் மூலமாக இது குறித்து கோவை மாநகரப் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பிறகு மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் மூன்று பெண்களின் புகார்களும் தனித்தனி முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டன. இரு தினங்களுக்கு முன் அவரது மூன்றாவது மனைவி ரம்யா கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந் நிலையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிலிப் ஜோசப் தில்லியில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் மீண்டும் பணிக்கு சேர்ந்த விஷயம் கோவை மாநகரக் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அங்கு சென்ற தனிப்படை போலீஸார் தில்லி ராணுவ முகாமில் உள்ள அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி அவரைப் பிடித்தனர்.

    தற்போது ராணுவ அதிகாரிகள் அவரை தில்லியிலிருந்து குன்னூர், வெலிங்டனில் உள்ள ராணுவ முகாமுக்கு மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அவரை குன்னூர் மாற்றிய பிறகு காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாநகரப் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இத் தகவலை கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உறுதிபடுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai