சுடச்சுட

  
  pkarath

  பொதுவான பிரச்னைகளில் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார்.

  முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் அவர் சந்தித்துப் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பிரகாஷ் காரத் அளித்த பதில்:

  முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து என்ன விஷயங்களைப் பேசினீர்கள்?

  இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பின் போது நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பல்வேறு கொள்கைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதிமுகவும் ஒரே விதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. அந்த விஷயங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசித்தோம். இந்த கருத்துப் பரிமாற்றங்கள் வருங்காலங்களிலும் தொடரும் என்று நம்புகிறோம்.

  கூட்டணி குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?

  நாட்டின் இப்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். நாடு சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மக்களவையில் அண்மையில் நிறைவேறிய உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசித்தோம். இதுபோன்று முக்கிய பிரச்னைகளில் இணைந்து செயல்படுவோம்.

  பொருளாதார சிக்கல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி என நாடு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் வேளையில், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறார்களா?

  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு இடையே பொருத்தப்பாடு இல்லாத காரணத்தால் நாடு இப்போது பொருளாதார சிக்கலைச் சந்தித்துள்ளது. அதேசமயம், மத்திய அரசு தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு திட்டமிடுவதாக நினைக்கவில்லை. மக்களவைக்கு அடுத்த ஆண்டே தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது என்று பிரகாஷ் காரத் பேட்டி அளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai