சுடச்சுட

  
  vaiko

  நவநீதம் பிள்ளையை திருமணம் செய்து கொள்வதாக சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா கூறியதற்கு, சிங்களவர்களின் ஆணவத் திமிர் பேச்சு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா, ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று கொச்சைப்படுத்தி இருக்கிறான்; விடத்தைக் கக்கி இருக்கின்றான்.

  நீதிக்காகவே வாழ்கின்ற, போற்றத்தக்க மாதரசியான நவநீதம் பிள்ளையை, இப்படி இழிவுபடுத்தி சிங்கள அமைச்சர் ஒருவன் பேசுகிறான் என்றால், ஏராளமான தமிழ்ப் பெண்களை, சிங்களவர்கள் கற்பழித்துக் கொன்ற கொடூரத்தின் பிரபதிபலிப்புத்தானே மெர்வின் சில்வாவின் இந்தத் திமிர்ப் பேச்சு? சிங்களவர்களுடைய கோர முகத்தை இப்போதாவது தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

  தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், கடுமையான யுத்த காலங்களில் கூட, ஒரு சிங்களப் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததும் இல்லை; சிங்களப் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதும் கிடையாது. மெர்வின் சில்வாவைப் பெற்ற தாயை, அவன் குடும்பத்துப் பெண்களை,  இப்படிக் கீழ்த்தரமாக யாராவது சொன்னால், சிங்களவனுக்கு எப்படி இருக்கும்?

  மற்றொரு அமைச்சர் விமல் வீரசேன, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதிகளுக்கு நவநீதம் பிள்ளை சென்றதே தவறு என்று  சொன்னது மட்டும் அல்ல; அவர் தென் ஆப்பிரிக்காவின் வம்சாவழித் தமிழர் என்பதால், சிங்கள அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றான். தமிழர்களின் இரத்தத்தைக் குடித்த கொடியவன் ராஜபக்சே, வெளிநாட்டில் இருந்தவாறே, நவநீதம் பிள்ளையும், மனித உரிமைகள் ஆணையமும், சிங்கள அரசுக்கு எதிராகவே செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகிறான்.

  தமிழர்களுக்கான நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்கவே, ராஜபக்சே கூட்டம் திட்டமிட்டு இப்படிப் பேசி வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து, மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை துணிச்சலாக அறிக்கை கொடுத்ததனால்தான், நடந்த இனக்கொலை ஓரளவுக்காவது உலகத்துக்குத் தெரிய வந்தது.

  மெர்வின் சில்வாவின் காட்டுமிராண்டிப் பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். தமிழர்களுக்கு எதிராக அராஜக வெறியாட்டம் போடும், சிங்கள அரசின் அதிபரை, காமன்வெல்த் அமைப்புக்குத் தலைவர் ஆக்க, இந்தியாவின் காங்கிரஸ் அரசு, வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்வதை, தமிழக மக்களும், குறிப்பாக இளைஞர் சமுதாயமும் மனதில் கொண்டு, இந்தத் துரோகங்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் வைகோ.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai