சுடச்சுட

  

  ஜிசாட்-7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

  By dn  |   Published on : 30th August 2013 07:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய கப்பற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

  இந்தியவிண்வெளி ஆய்வுக்கழகம்(இஸ்ரோ)தயாரித்துள்ள ஜிசாட்-7 செயற்கைக்கோள், தென் அமெரிக்காவின் பிரெஞ்ச்கயானா பகுதியில் அமைந்துள்ள கௌரூ விண்வெளித்தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏரியான்-5 ஏவூர்தி(ராக்கெட்) மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ரூ.185 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-7 செயற்கைக்கோள், 2625 கிலோ எடைகொண்டது. இந்திய கப்பற்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், இந்திய நிலப்பகுதி தவிர, அதை சுற்றி அமைந்துள்ள கடல்பகுதியின் நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்க உதவும். கடல்பகுதியில் இருந்து தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும், உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செயற்கைக்கோள் உதவியாக இருக்கும்.

  விண்ணில் பறக்க தொடங்கிய 34 நிமிடங்கள் மற்றும் 25 நொடிகளில் புவி இணை பரிமாற்ற சுற்றுப்பாதையில்(ஜியோ சின்க்ரனஸ் டிரான்பர் ஆர்பிட்-ஜிடிஓ)ஜிசாட்-7 செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. ஏரியான்-5 ஏவூர்தியில் இருந்து விடுவிக்கப்பட்டு விண்ணில் செலுத்துவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலம், ஹாசனில் அமைந்துள்ள இஸ்ரோவின் தலைமை கட்டுப்பாட்டுமையத்திற்கு(எம்.சி.எஃப்.)செயற்கைக்கோளில் இருந்து சமிக்ஞைகள் வரத்தொடங்கியதாக இந்தியவிண்வெளி ஆய்வுக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சூரியஒளித்தகடுகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், அவை மின்சாரம் உற்பத்திசெய்ய தொடங்கியுள்ளன. முதல்கட்டசோதனையில் செயற்கைக்கோள் ஆரோக்கியமாக இருப்பதை அறிய முடிந்ததாக அந்த அறிக்கையில் மேலும்குறிப்பிடப்பட்டுள்ளது.

  குறைந்த வேக குரல் முதல் அதிவேக தகவல் தொடர்புகள் உள்ளிட்டபல்வேறு சேவைகளை ஜிசாட்-7 செயற்கைக்கோள் வழங்கவுள்ளது. இந்தியாவின் நிலப்பகுதி தவிர, அதை சுற்றியுள்ள கடல்பகுதிகளிலும் தகவல்பரிமாற்ற வசதியை அளிக்கும். இது இந்திய கப்பற்படையின் பாதுகாப்பு மற்றும்கணிகாணிப்பு பணிகளுக்கு பேருவிதியாக இருக்கும். புதிய ஆன்டெனா தவிர, யூ.எச்.எஃப்.,எஸ்,சி மற்றும் க்யூ பேன்ட்களில்செயற்கைக்கோள் இயங்கும் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளன. இதற்கு முன்பு விண்வெளிசார்ந்த தகவல்தொடர்பில் கப்பற்படை எதிர்கொண்டிருந்த லைன் ஆஃப் சைட் மற்றும் ஐயனோஸ்பியரிக் எஃபெக்ட்ஸ் போன்ற பிரச்னைகள் புதிய செயற்கைக்கோள் மூலம் தீர்க்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  ஜிசாட்-7-இல் அமைந்துள்ள திரவ உச்சநிலை மோட்டாரை(எல்.ஏ.எம்.)இயக்குவதன் மூலம் செயற்கைக்கோளின் சுற்றுவட்டப்பாதையை 3 முறை உயர்த்துவதன்மூலம், 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் அமைந்துள்ள புவி இணை சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடியும். சுற்றுவட்டப்பாதையை உயர்த்துவதற்கான முதல்கட்டப்பணி சனிக்கிழமை காலை நிகழ்த்தப்படும். புவி இணை சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும்பணி செப்.4-ஆம் தேதிமுழுமையாக நிறைவடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  ஜிசாட்-7 போன்ற அதிக பளு கொண்ட செயற்கைக்கோளை இந்தியாவில் தயாரித்துள்ள கிரையோஜெனிக் என்ஜின் உதவியுடன் இயக்கப்படும் ஜி.எஸ்.எல்.வி.ஏவூர்திமூலம் செலுத்துவது இயலாத காரியம். எனவே, ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பான ஏரியான் விண்வெளி நிறுவனத்தின் ஏரியான்-5 ஏவூர்தி மூலம் ஜிசாட்-7 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு காப்பீடு, ஏவுதல் உள்ளிட்டவைகளுக்கு ரூ.470 கோடி செலவழித்துள்ளதாக இஸ்ரோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  ஜிசாட்-7 தவிர, யூடெல்சாட்-25பி/இ'ஸ்-ஹெயில்-1 என்ற செயற்கைக்கோளையும் ஏரியான்-5 ஏவூர்தி விண்ணில் செலுத்தியது. ஏவூர்தி விண்ணில் செலுத்தப்பட்ட 27-ஆவது நிமிடத்தில் யூடெல்சாட்-25பி/இ'ஸ்-ஹெயில்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.

  ஏவுதளத்தில் வீற்றிருந்த பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் அருண்சிங், இஸ்ரோ இயக்குநர் எஸ்.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் ஜிசாட்-7 விண்ணில் செலுத்தப்படுவதை நேரில் கண்டு உற்சாகமடைந்தனர். இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே காணப்படும் ராஜதந்திர நல்லுறவையே இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது என்று அருண்சிங் கூறினார். அடுத்தமாத இறுதியில் ஜிசாட்-7 செயற்கைக்கோள் இயங்க தொடங்கும் என்று சிவக்குமார் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai