அரசு மருத்துவக் கல்லூரிக்கு சமுதாய வானொலி: கனகசபை
By dn | Published On : 30th August 2013 07:10 PM | Last Updated : 30th August 2013 07:10 PM | அ+அ அ- |

அரசு மருத்துவக் கல்லூரியில் சமுதாய வானொலியைத் தொடங்க முயற்சித்து வருவதாக சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்.
இது குறித்து டாக்டர் கனகசபை கூறியது:
மருத்துவக் கல்லூரியின் செயல்பாடுகள், அறிவிப்புகள் மற்றும் அங்கு நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்திகளை ஒலிபரப்ப சமுதாய வானொலி ஒன்றை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஓராண்டாக இந்த முயற்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசுதான் சமுதாய வானொலி தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
ஏன்கெனவே சென்னையில் லயோலா கல்லூரி, ஐ.ஐ.டி. கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சமுதாய வானொலி இயங்கி வருகிறது. சென்னை மருத்துவக் கல்லூரிக்கு புதியதாக வானொலி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் அலைவரிசையில் மோதல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் சமுதாய வானொலி ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
எனினும் ஏற்கெனவே இயங்கி வரும் சமுதாய வானொலி அனைத்தும் பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உட்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கென்று ஒரு சமுதாய வானொலி அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கோரி வருகிறோம் என்றார் அவர்.