ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியவருக்கு 6 மாதம் சிறை: முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
By பா.நாகராஜன் | Published On : 30th August 2013 07:00 PM | Last Updated : 30th August 2013 07:00 PM | அ+அ அ- |

அலுவலகத்தில் பணியின் போது ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிந்தாரிப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கற்பூர சுந்தர பாண்டியன் என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் உக்கிரபாண்டியன் என்பவர் உதவி மேலாளராக உள்ளார்.
இதில், கற்பூர சுந்தர பாண்டியன் என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் பணியின் போது அவரை அறியாமல் தவறு செய்துள்ளார். அந்தத் தவறை சுட்டிக் காட்டிய உக்கிரபாண்டியன், ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் கற்பூர சுந்தர பாண்டியனை திட்டி உள்ளார்.
இது குறித்து கற்பூர சுந்தர பாண்டியன் சிந்தாரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உக்கிரபாண்டியன் மூது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன சட்டப் பிரிவின் அரசு வழக்குரைஞர் நாரயண ராவ் வாதாடினார்.
வழக்கை நீதிபதி ஜி.சொக்கலிங்கம் விசாரித்தார். விசாரணையின் இறுதியில் உக்கிரபாண்டியன், ஜாதிப் பெயரைச் சொல்லி கற்பூர சுந்தர பாண்டியனைத் திட்டியது நிரூபிக்கப்பட்டதால் உக்கிரபாண்டியனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து நீதிபதி சொக்கலிங்கம் தீர்ப்பளித்தார்.