மத்திய அரசின் நய வஞ்சக செயல் கண்டிக்கத்தக்கது: தா.பாண்டியன்
By dn | Published On : 31st August 2013 04:22 PM | Last Updated : 31st August 2013 04:22 PM | அ+அ அ- |

தமிழக மீனவர்களுக்கு பச்சைத் துரோகம் செய்திட்ட மத்திய அரசின் நய வஞ்சக செயலை வண்மையாக கண்டிக்கதக்கது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கச்சத் தீவு மீட்க்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கோரி வருவதுடன் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவும், தமிழ்நாடு அரசும், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்பொது விசாரணை நடைபெற்று வருகின்றது.மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கச்சித்தீவு கேட்பார் அற்று கிடந்தது என்றும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அதன் காரணமாக இலங்கை நாட்டிற்கு கச்சத் தீவு சொந்தமாகி விட்டது என்றும் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்க்குரியதாகும்.இலங்கைக்கு கச்சித் தீவு சொந்தமென்றால், இருநாடுகளும் 1974-ல் ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
தமிழக மீனவர்கள் நித்தம் நித்தம், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், வலைகள் அறுக்கப்படுவதும், மீன்களை பறிமுதல் செய்வதும், படகுகளை உடைப்பதும், பறிமுதல் செய்து எடுத்துச் செல்வதும் மீனவர்களை கைது செய்து சிறையில், அடைப்பதும், சுட்டுக்கொல்வது போன்ற வன்முறைகளை மேற்கொண்டுவரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்து, தமிழக மீனவர்களுக்கு பச்சைத் துரோகம் செய்திட்ட மத்திய அரசின் நய வஞ்சக செயலை வண்மையாக கண்டிப்பதுடன், கச்சித் தீவை மீட்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழக அனைத்து பகுதி மக்களும் ஆதரவளிக்க முன்வர வேண்டுகிறோம்.நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு போராடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதுடன் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.