ராஜபட்ச வருகையை கண்டித்து ஸ்ரீவிலி. வழக்குரைஞர்கள் சங்கம் இருநாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபட்ச இந்தியாவில் கால் வைக்கக் கூடாது என்றும், அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து

மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபட்ச இந்தியாவில் கால் வைக்கக் கூடாது என்றும், அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் த.கதிரேசன் தலைமையில், செயலாளர் ஆர்.ராஜையா முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வழக்குரைஞர்கள் பேசுகையில் கூறியதாவது:
சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களுக்கு உரிமைகளை கொடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1.50 லட்டத்திற்கு மேலான தமிழர்களின் உயிர்கள்.
தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டு இருக்கும் ராஜபட்ச, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் ராஜபட்ச வருகையைக் கண்டித்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பது என்று பேசினர்.பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தில் 330 வழக்குரைஞர்கள் உள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com