திபெத் பிரச்னைக்கு இந்திய மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: நாடு கடந்த திபெத் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
By dn | Published On : 02nd January 2013 05:44 PM | Last Updated : 02nd January 2013 05:44 PM | அ+அ அ- |

திபெத்தில் நடைபெறும் சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்திய மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று நாடு கடந்த திபெத் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பெங்களூரில் நாடு கடந்த திபெத் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் ஜிமி ஜியான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திபெத்தை, சீனா ஆக்கிரமித்துள்ளது. அங்கு பல்வேறு அத்துமீறல்களை சீனா அரங்கேற்றி வருகிறது. அமைதியே உருவான புத்தமதத் துறவிகள் வாழ்ந்து வந்த அப்பகுதியில், தற்போது அமைதி இல்லை. அங்கு வாழும் திபெத்தியர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறது. தற்போது, புத்தமதத் துறவிகள், திபெத் விடுதலைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். சீன ராணுவத்தின் கொடுமைகளை பார்த்து, தாங்க முடியாமல், கடந்த 2009-ம் ஆண்டு முதல் 95 துறவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இருண்டு கிடக்கும் திபெத்தில், எங்கள் தீக்குளிப்பு மூலம் வெளிச்சம் ஏற்படட்டும் என்ற கூறியே தீக்குளிப்பில் ஈடுபட்டுள்ளனர். தலாய் லாமா மீண்டும் நாடு திரும்ப வேண்டும். திபெத்தில் அமைதி நிலவ வேண்டும். அதற்காக இந்திய மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஜனவரி 5-ம் தேதி, பெங்களூர் சுதந்திரப் பூங்காவில், எழுச்சி ஊர்வலம் நடத்த உள்ளோம் என்றார் அவர். பாராளுமன்ற உறுப்பினர்கள் காரி புத்து, பி.செரிங், அடு செரின், லோப்சாங், செரிங் உடன் ஆகியோர் உடனிருந்தனர்.