ஆஸ்திரேலியா டெஸ்ட்: மீண்டும் தமிழ் அமைப்புகள் போராட்டம்
By தினமணி | Published On : 03rd January 2013 05:24 PM | Last Updated : 03rd January 2013 05:24 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கெனவே முடிந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் பேட் செய்த இலங்கை அணியில் அதிக பட்சமாக திரிமன்னே 91 ரன்களையும், ஜெயவரத்தனே 72 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் 87.4 ஓவர்களில் 294 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஜேக்சன் பேர்டு 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், சிடில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு: இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே இப்போட்டியில் 72 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடுகளில் தான் விளையாடிய போட்டிகளில் இப்போதுதான் முதன்முறையாக அரை சதடித்துள்ளார். கடைசியாக, 2009ஆம் ஆண்டு நவம்பரில் ஆமதாபாதில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 275 ரன்களை அவர் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் போராட்டம்: இப்போட்டியின்போது மைதானத்துக்கு வெளியே ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், இலங்கைக்கு எதிரான இப்போட்டியை ஆஸ்திரேலியா கைவிட வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது அந்நாட்டு ராணுவம் போர்க்குற்றங்களைப் புரிந்தது. இதனை பாரபட்சமின்றி சர்வதேச சமுகம் விசாரிக்க வேண்டும். அதுவரை இலங்கை அணியுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தமிó அமைப்புகள் முன்னரே தெரிவித்திருந்தனர். "ஐம்பதுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி போராட அனுமதியளித்ததாக' ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.