மனிதர்களிடம் புதிய மருந்து சோதனை : உச்சநீதிமன்றம் காட்டம்
By dn | Published On : 03rd January 2013 03:26 PM | Last Updated : 03rd January 2013 03:26 PM | அ+அ அ- |

இந்தியாவில் மருந்துகளை ஆராய்ச்சி செய்ய மனிதர்களே பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், இதனால் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.
மருத்துவ ஆய்வுக் கூடங்களில் புதிதாக தயாரிக்கப்படும் மருந்துகளை அனுமதியின்றி, மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருவது பல காலமாக நடந்து வருகிறது.
இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இது குறித்த மனுவை விசாரித்து வரும் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.ஆர். தாவே ஆகியோர் அடங்கிய அமர்வு, சர்வதேச நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை மனிதர்களிடம் செலுத்தி சோதனை செய்வதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்தியாவில் மருந்து ஆய்வுகள் அனைத்தும் சுகாதாரத் துறை செயலகத்தின் கண்காணிப்பிக் கீழ் நடைபெறும் வகையில் உத்தரவிட வேண்டும்.
நமது நாட்டில் வாழும் மனிதர்களின் நலனைக் காக்க வேண்டியது நமது கடமை. இதுபோன்ற சம்பவங்களில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக ஆய்வு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டாக வேண்டும். சட்டத்துக்கு விரோதமான முறையில் நடத்தப்படும் மருத்துவ சோதனைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை மத்திய அரசு மிக முக்கிய விஷயமாக எடுத்து கையாள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.