திருவள்ளுவர் விருது, பெரியார் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு
By | Published On : 12th January 2013 09:23 AM | Last Updated : 12th January 2013 11:03 AM | அ+அ அ- |

திருவள்ளுவர் விருது. பெரியார் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களின் பெயர்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்:
திருவள்ளுவர் விருது : கலைமாமணி டாக்டர் ந.முருகன்(சேயோன்)
தந்தை பெரியார் விருது : டாக்டர் கோ.சமரசம்
அண்ணல் அம்பேத்கர் விருது : தா.பாண்டியன்
பேரறிஞர் அண்ணா விருது : கே.ஆர்.பி.மணிமொழியன்
பெருந்தலைவர் காமராசர் விருது :சிங்காரவடிவேல்
மகாகவி பாரதியார் விருது : பாரதிக் காவலர் கு.ராமமூர்த்தி
பாவேந்தர் பாரதிதாசன் விருது : பேராசிரியர். முனைவர் சோ.ந.கந்தசாமி
தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது : முனைவர் திருமதி பிரேமா நந்தகுமார்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது : முனைவர் நா.இராசகோபாலன் (மலையமான்)
இந்த விருதுகள் 15.1.2013 அன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் நடைபெறும் கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம் திறப்பு விழா, திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படும்.
விருது பெறுவோர், தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி கௌரவிக்கப் படுவார்கள். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி அரசாணைகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என்று அரசின்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.