Enable Javscript for better performance
163 ஆண்டு கால தந்தி சேவை நிறைவு - Dinamani

சுடச்சுட

  

  உலகின் மிகவும் பழைமை வாய்ந்த தொலைத்தொடர்பு சேவையான "இந்திய தந்தி சேவை' ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியுடன் நிறைவடைந்தது.

  இதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவையில் முடிசூடா மன்னனாகக் கோலோச்சி வந்த தந்தி சேவை மூடு விழாவைக் கண்டுள்ளது.

  தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியால் இணையதளம், மின்னஞ்சல், தொலைபேசி போன்ற அதிநவீன தொடர்பு வசதிகள் உலகம் முழுவதும் படர்ந்து விரிந்துள்ளன.

  இந்நிலையில், மூடு விழா காணும் இந்திய தந்தி நிலையங்களின் கடைசி சேவையைப் பெற தலைநகரவாசிகள் பெரிதும் ஆர்வம் காட்டினர்.

  "கடைசி நாளில் எனது நண்பர்களுக்குத் தந்தி அனுப்ப, தில்லி மத்திய தந்தி அலுவலகத்துக்கு வந்துள்ளேன்.

  என்னைப் போலவே பலரும் இங்கு கூட்டமாக வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியத்தில் திளைத்துள்ளேன்' என்றார் கல்லூரி மாணவர் அரவிந்த்.

  ஊழியர்களின் கவலை: தில்லியில் செயல்பட்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீரி கேட் தந்தி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை பரபரப்புடன் காணப்பட்டது.

   பெரும்பாலான தில்லிவாசிகள் தந்தி சேவையின் கடைசி நாளில் தொலைதூரத்திலும் உள்ளூரிலும் உள்ள குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோருக்கும் தந்தி அனுப்ப ஆர்வம் காட்டினர்.

  "கடந்த சில ஆண்டுகளாக மாதம் 10,000 தந்திகள் வரை எங்கள் அலுவலகம் கையாண்டது.

  ஆனால், நாளடைவில், மாதத்துக்கு 100 தந்திகள் கூட அனுப்ப முடியாத அளவுக்கு வேலை இல்லாத நிலை உருவானது.

  இந்நிலையில், கடைசி நாள் சேவை என்பதால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு காலை முதல் தந்தி அனுப்பி வருகின்றனர்' என்று கூறினார் கஷ்மீரி கேட் தந்தி அலுவலகத்தில் பணியாற்றும் லதா ஹரித் என்ற பெண் அதிகாரி.

  "ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் 45,000 தந்தி அலுவலகங்கள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 45 அலுவலகங்கள் மட்டுமே உள்ளன.

  30 ஆண்டுகளுக்கு முன்பு நான் பணியில் சேர்ந்த போது, தந்தி அனுப்புவது எப்படி என ஆறு மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட சேவை மூடுவிழா காண்பது கவலை அளிக்கிறது' என்று அவர் குறிப்பிட்டார்.

   தந்தி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன், தரை வழி இணைப்பு சேவை, அகண்ட அலைவரிசை சேவை, வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவற்றில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது.

  ஆனால், இந்த முடிவு எழுத்துப்பூர்வமாக இல்லை என்பதால் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவது குறித்து அதன் தொழிற்சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

  தந்தி பிறந்த வரலாறு: சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குத் தகவல் சொல்லி அனுப்ப மனிதர்கள் பயன்படுத்தப்பட்டதும், பிறகு புறாவின் காலில் செய்தி அடங்கிய காகிதத்தை மனிதர்கள் கட்டி அனுப்பியதும் வரலாறு. இந்நிலையில், 19-ஆம் நூற்றாண்டில் உலகின் முதலாவது தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.

  ரஷியாவைச் சேர்ந்த பௌல் ஷில்லிங் என்பவர் 1832-இல் மின் காந்த அலைகள் மூலம் செயல்படும் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார்.

  ரஷியாவின் புனித பீட்டர்ஸ் பெர்கில் இருந்து அவருடைய குடியிருப்புகளின் இரு அறைகளில் தனித் தனி கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் தகவல் அனுப்பி வெற்றி கண்டார். பின்னர் நீண்ட தூரத்துக்கு தகவல் அனுப்பி தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார்.

  அதையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார்.

  அவரது உதவியாளர் ஆல்ஃபிரெட் வெயில் "மோர்ஸ் கோட்' சிக்னலை கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு மூலம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு உலகின் முதலாவது தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இக்கண்டுபிடிப்புதான் உலகில் இன்றளவும் கடைப்பிடிக்கப்படும் தந்தி சேவைக்கு அடித்தளமாக விளங்கியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai