ஆட்டோவில் கடத்தப்பட்ட அம்மன் சிலை பறிமுதல்: ஐம்பொன் சிலையா போலீஸார் விசாரணை
By சபேஷ் | Published On : 19th July 2013 09:01 AM | Last Updated : 19th July 2013 09:01 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஆட்டோவில் கடத்தப்பட்ட ஐம்பொன்சிலையை அரக்கோணம் டவுன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் ரயில்நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை சோளிங்கரை அடுத்த பனவட்டாம்பாடிக்கு வாடகைக்கு எடுத்துச்செல்லப்பட்ட ஆட்டோ அங்கிருந்து புறப்பட்ட போது அதில் அம்மன்சிலை ஏற்றப்பட்டதாம். இதையறிந்த அந்த ஆட்டோவின் டிரைவர் வெங்கடேசன், அச்சிலை மற்றும் அதை கொண்டு வந்த நபர்களுடன் நேராக ஆட்டோவை அரக்கோணம் டவுன் காவல்நிலையத்திற்கு ஒட்டி வந்தார்.
இதையறிந்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார், அச்சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் அதில் வந்த காஞ்சிபுரம் மாவட்டம் மருதாடு கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மற்றும் திருவள்ளுர் மாவட்டம் பேரம்பாக்கத்தை சேர்ந்த ராமன்(55) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலை இரண்டரை அடி உயரமும், ஐம்பொன் அல்லது பித்தளையாக இருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இச்சிலை மணலில் புதைக்கப்பட்டு எடுத்துவந்த அடையாளங்களுடன் உள்ளது. சிலை குறித்த தகவல் வேலூர் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்தபிறகே இச்சிலை பற்றிய உண்மை விவரங்கள் வெளிவரலாம் என தெரிகிறது.