அன்னிய நேரடி முதலீட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: கருணாநிதி

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது ஆபத்து என்றும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஏற்கெனவே கூறியுள்ளேன்.இந் நிலையில் இந்திய பாதுகாப்பு மற்றும் நிர்வாக
அன்னிய நேரடி முதலீட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: கருணாநிதி

அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மத்திய அரசை, திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது ஆபத்து என்றும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஏற்கெனவே கூறியுள்ளேன்.இந் நிலையில் இந்திய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரகசியங்களுக்கு இன்றியமையாத துறைகளான தொலைத் தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி ஆகிவற்றில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

தொலைத் தொடர்புத் துறையில் 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.இதில் 49 சதவீத அளவிலான முதலீட்டை அரசின் முன் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்கள் பெறலாம்.தொலைத் தொடர்புத் துறையில் 100 சதவீதம் உயர்த்தப்படும் போது,  இதுவரை இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வந்த சில பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள், இனிமேல் முழு முதலீட்டோடு செயல்படுகிறோம் என்பர்.

இந்திய நிறுவனங்களில் ஒத்துழைப்பே தேவையில்லை என்ற நிலை ஏற்படும்.வெளி நாட்டு நிறுவனங்களின் ஆதரவோடு இயங்கி வந்த இந்திய நிறுவனங்களும் தனித்துப் போட்டியிட முடியாமல் தவிக்க நேரிடும்.ஓரளவு முதலீட்டோடு இயங்கி வந்த இந்திய நிறுவனங்களின் கதி, நிர்க்கதியாக முடியும். பல லட்சம் ஊழியர்களின் நலனை நட்டாற்றில் விட்டதுபோல் ஆகும்.அமெரிக்கா, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் எல்லாம் 35 சதவீதத்துக்கு மேல் தொலைத் தொடர்புத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பது இல்லை.அமெரிக்காவின் உளவுத் துறை இணையத் தொடர்புகள் மூலமாக இந்தியா போன்ற நாடுகளை உளவு பார்க்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.இந் நிலையில் இந்தியா முடிவு எங்கே போய் முடியப் போகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நோயைப் போக்கவும், இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்கவும் மருந்துகளாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்க இயலாது.மத்திய அரசு கண்டுபிடித்துள்ள மருந்து, நோயைத் தணித்திட உதவாது. பக்க விளைவுகளை ஏற்படுத்தி பாதிப்பை பன்மடங்காக்கும்.மக்களவைக்கான பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ள நிலையில், மிகக் கடுமையான இது போன்ற முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ளலாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.இது நிச்சயம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை, வெளிநாட்டினர் கட்டுப்பாட்டுக்குள் செல்ல வழி வகுக்கும்.அன்னிய நேரடி முதலீட்டை திமுக முழுவதுமாக எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com