அதிமுக கவுன்சிலர் மீது தாக்குதல்: தேமுதிக பிரமுகர் கைது
By ஜெகதீஷ் | Published On : 14th June 2013 08:45 PM | Last Updated : 14th June 2013 08:45 PM | அ+அ அ- |

சென்னை பள்ளிக்கரணை அதிமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் தேமுதிக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை ஜல்லடையான் பேட்டை 197-வது வார்டு அதிமுக கவுன்சிலர் மனோகரன். அதே பகுதியை சேர்ந்த தேமுதிக செயலாளர் பத்மநாபன். இவர் மாநகராட்சி தேர்தலில் மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனால் இவர்களிடையே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மனோகரன் வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தேமுதிக செயலாளர் பத்மநாபன் வந்தார். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம். அப்போது பத்மநாபன் கவுன்சிலர் மனோகரனை கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து பத்மநாபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.