சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்கள் செயல்பட இடைக்காலத் தடை

அண்மையில் நடைபெற்ற கூட்டறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேத்தியாதோப்பு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்கள் செயல்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற கூட்டறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேத்தியாதோப்பு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்கள் செயல்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் உள்ள இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான இயக்குநர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பொதுப் பிரிவில் 9 இயக்குநர்களும், பெண்கள் பிரிவில் 5 இயக்குநர்களும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 3 இயக்குநர்களும் ஆக மொத்தம் 17 இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

 இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மே 28-ம் தேதி நடைபெற்றது. பொதுப் பிரிவில் 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 29 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 9 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. பெண்கள் பிரிவில் தாக்கல் செய்த மனுக்களில் 9 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 5 மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 3 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

 ஆக மொத்தம் 62 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் 45 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 17 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சம் எத்தனை பேர் இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான எண்ணிக்கையில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், போட்டியின்றி 17 பேர் இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 இந்நிலையில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்களில் டி.ஆனந்தன் உள்ளிட்ட 24 பேர் இந்தத் தேர்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் தேர்தலை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

 இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி டி.ஹரி பரந்தாமன், இயக்குநர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 பேரும் செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டார்.

 சாதாரணமாக இதுபோன்ற தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் இடைக்காலத் தடை எதுவும் விதிப்பதில்லை. ஆனால் இந்த வழக்கில் 62 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில் 45 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும், ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அதற்கேற்ப மிகச் சரியான எண்ணிக்கையில் ஒவ்வொரு பிரிவிலும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் தெரிவதால், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இயக்குநர்களாக செயல்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com