முதல்வரின் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால், இந்தியா வளமான நாடாகும்: அமைச்சர் வைகைச்செல்வன்
By JEYAKUMAR K | Published On : 14th June 2013 08:53 PM | Last Updated : 14th June 2013 08:57 PM | அ+அ அ- |

தமிழக முதல்வரின் ஒட்டு மொத்த திட்டங்களையும் இந்தியாவில் செயல்படுத்தினால், இந்தியா ஒரு வளமான பாரதமாக மாறும் என்றும், இன்றைய முதல்வர் நாளைய பிரதமராக வேண்டும் என அனைத்துத் தரப்பிரனரும் சுட்டிக்காட்டுகின்றனர் என்றும் தமிழக பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
விருதுநகரில் 328 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 41 லட்சத்து 872 மதிப்பிலான தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா மாவ்ட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் வைகைச்செல்வன் ஆகியோர் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் தமிழக பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும் போற்றும் வகையில் அமைந்துள்ளது. கர்நாடகாவில் தமிழக முதல்வரின் ஒரு சிறப்புத் திட்டத்தைச் சொல்லி வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தினை பெற்றுள்ளனர் என பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டும் வகையில் முதல்வரின் சிறப்புத் திட்டங்கள் அமைந்துள்ளன. தில்லியில் கற்றலும், பாரதமும் என்ற நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது மத்திய அமைச்சர்கள் பல்லம்ராஜூ, சசிதரூர் ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என குறிப்பிட்டு பேசினார்கள்.
அதேபோன்று உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பேசும் போது, உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தமிழக முதல்வர் மீது பாசமும், மரியாதையும் வைத்துள்ளார் என்றும் தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக தந்து வெற்றி பெற்றோம் என்றும் சுட்டிக்காட்டினார். ஒரு திட்டத்திற்கு ஆட்சி அதிகாரத்தைப் பெறுகிறார்கள் என்றால், தமிழக முதல்வரின் ஒட்டு மொத்த திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்தினால், இந்தியா ஒரு வளமான பாரதமாக மாறும் எனவும், இன்றை தமிழக முதல்வர் நாளைய பிரதமராக வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழக மக்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜூ வரவேற்றார்.