கணக்கெடுப்பு படிவத்தில் திருநங்கைகளுக்கு 9 என்ற குறியீட்டை நீக்க வேண்டும்: கருணாநிதி
By dn | Published On : 29th June 2013 02:54 PM | Last Updated : 29th June 2013 02:54 PM | அ+அ அ- |

பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் திருநங்கைகளுக்கு 9 என்ற குறியீட்டை நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள்நடந்து வருகின்றன.கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்டகுடும்பத் தலைவரின்பெயர்,தொழில்,இருப்பிடம்போன்றஎல்லா விவரங்களையும், அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம்.இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண்தற்போது வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது.தி.மு. கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங்கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female)என்றுஅச்சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கையர்களைக் (Transgender) குறிக்கும்வகையில் T என்ற எழுத்து குறிப்பிடப்பட்டது. முதன் முதலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண்என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டு விட்டு ஆண் பெண் அல்லாத பாலின பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் கூறும்போது, “ஏற்கனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப்பிட்டுத் தான் கிண்டல் செய்கிறார்கள், இப்போது அரசே அந்த எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்கள். பொருளாதார கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, இந்தப் படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய்திருந்தாலும்,மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுகொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.