மீனவர் தாக்குதலில் இந்திய கடற்படையினரின் பணி என்ன ? பாஜக கேள்வி
By செல்வமுத்து | Published On : 08th March 2013 04:46 PM | Last Updated : 08th March 2013 04:46 PM | அ+அ அ- |

தமிழகம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இந்திய கடற்படையினரின் பணி என்னவாக உள்ளதென பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை புதுவை மாநில பாஜக செயலர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
பிறகு அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது : ஜெனீவாவில் ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்கவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை தங்களது நிலைபாட்டை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை மறைமுகமாக எச்சரிக்கும் வகையிலேயே, கடந்த சில நாள்களாக காரைக்கால் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதாக கருத வேண்டியுள்ளது.
இந்திய எல்லையில் புகுந்து இலங்கை கடற்படையினர் தாக்குகின்றனர் என காரைக்கால் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால், இந்திய கடற்படையினரின் பணி என்ன, அவர்கள் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி சாமானிய மக்களிடேயே ஏற்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் கடற்படை, கடலோரக் காவல்படையினர் பணியை செம்மைப்படுத்த தீவிர கவனம் செலுத்த வேண்டும். இலங்கை விவகாரத்தில் காட்டப்படும் அலட்சியம், வளரும் பல அண்டை நாடுகளின் அச்சுறுத்தலுக்கும் இந்தியா ஆளாகவேண்டிவிடும் என்றார் அவர்.