ஹெலிகாப்டர் பேரம்: முன்னாள் அமைச்சரின் சகோதரரிடம் சிபிஐ விசாரணை
By தினமணி | Published On : 08th March 2013 08:33 PM | Last Updated : 08th March 2013 08:33 PM | அ+அ அ- |

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவின் சகோதரரும், ஐடிஎஸ் இன்ஃபோடெக் நிறுவன தலைவருமான சதீஷ் பக்ரோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். ரூ. 3,600 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்து வரும் சிபிஐ,ஏற்கெனவே இந்த பேரம் தொடர்பாக ஏரோமேட்ரிக்ஸ் நிறுவனம் மற்றும் இன்ஃபோடெக் நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.
லஞ்சப் பணம் மோரீஷஸ் மற்றும் டுனீசியா வழியாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பேரம் தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த அறிக்கையில் ஐடிஎஸ் இன்ஃபோடெக் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதனடிப்படையில் சதீஷிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இத்தாலியைச் சேர்ந்த இடைத்தரகர், ஐடிஎஸ் இன்ஃபோடெக் நிறுவனத்தின் மூலம் லஞ்சப்பணத்தை கைமாற்றியது தொடர்பாக சதீஷிடம் விசாரணை நடத்தப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.