சுடச்சுட

  

  மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களே மத்திய அரசிலிருந்து திமுகவை வெளியேற்றியது: பழ.நெடுமாறன்

  By dn  |   Published on : 30th March 2013 05:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய தொடர்போராட்டம் காரணமாகவே மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

  மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களுக்காக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற தீர்மானம் இதுவரை சட்டபேரவையில் இல்லாதது. ஆனால், டெசோ மாநாடு தீர்மானமே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறுவது சரியல்ல. தீர்மானம் நிறைவேறும் போது திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள்ளிருந்து வாக்களிக்கவில்லை. வாக்களிக்கவேண்டிய இக்கட்டான நிலையைத் தவிர்க்கவே திமுக வெளிநடப்புச் செய்துள்ளது. இதன்மூலம் திமுக ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்திய நிர்பந்தமே திமுகவை மத்திய அரசிலிருந்து விலகவைத்துள்ளது.

  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஈழத்தமிழர் பிரச்னைக்கு தமிழகத்தை தவிர வேறு மாநிலங்களில் ஆதரவில்லை என்கிறார். பாலஸ்தீனத்துக்கு மத்திய அரசு ஆதரவளித்தது, கிழக்கு வங்காளதேசம் உருவாக ஆதரவளித்தது உள்ளிட்டவற்றுக்கு மற்ற மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகா மத்திய அரசு முடிவெடுத்தது? ஆகவே வரலாறு தெரியாமல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் பேசுகிறார்.வரும் நவம்பரில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த இந்தியா ஆதரவளித்துள்ளது. அங்கு மாநாடு நடந்தால் காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இலங்கை அதிபர் ராஜபட்சே இருப்பார். அதன்பின் அவரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிறுத்தமுடியாது. ஆகவே மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அக்கருத்தை வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

  இலங்கை தூதர் பிரசாத் கரியவலம் இலங்கை சிங்களவர் இந்திய வம்சாவளியினர் என்கிறார். அப்படி எனில் அவர்களுக்குத் தனிநாடு எதற்கு?  மேலும், சீனப் போரின்போது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்காத இலங்கை, கிழக்கு வங்காளதேசம் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவ விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிடவும் அனுமதித்தது சரியா? மத்திய அரசுக்கான ஆதரவை திமுக, திரிணாமுல் கட்சிகள் விலக்கிக்கொண்டுள்ளன. சரத்பவாரும் விலகப் போவதாக கூறிவருகிறார். ஆகவே மத்திய அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை. ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தானாகவே மக்களிடமிருந்து தனிமைப்பட்டுவிட்டது. மாணவர் போராட்டம் யாராலும் தூண்டப்படவில்லை. மக்களவையில் எதிர்க்கட்சிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவே குரல்கொடுக்கின்றன. மாணவர் போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்ய மத்திய உளவுத்துறையும், காங்கிரஸும் முயற்சிப்பது வெற்றிபெறாது என்று கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai