சுடச்சுட

  

  கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக சித்தராமைய்யா இன்று ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  அவரது அரசியல் வாழ்க்கை :  கர்நாடக அரசியல் வரலாற்றில் சித்தராமையா முக்கியப் பங்கு வகித்த முன்னணித் தலைவர். மைசூர் மாவட்டம், வருணா ஒன்றியம், சித்தராமனஹுன்டி கிராமத்தில் பிறந்த சித்தராமையா, ஒக்கலிகர், லிங்காயத்து சமுதாயங்களுக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் அதிகம் உள்ள குருபா (இடையர் அல்லது யாதவர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

  இந்தச் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாரும் இதுவரை முதலமைச்சராகப் பதவி வகித்ததில்லை. ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த சித்தராமையா, ராம் மனோகர் லோஹியாவின் சோசலிஸ கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்.

  பி.எஸ்.ஸி., எல்.எல்.பி. படித்துள்ள இவர், சில காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சமூக நீதியை நிலை நாட்டுவதில் ஆர்வம் கொண்ட இவர், 1978-ஆம் ஆண்டில் அரசியலில் காலடி எடுத்துவைத்தார்.

  மைசூர் வட்டம், வாரியத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வருணா தொகுதியில் இருந்து பாரதிய லோக் தளக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் பாரதிய லோக் தளக் கட்சி சார்பில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

  எல்லோரும் வியக்கும் வகையில் வெற்றி பெற்றதால், மைசூர் மாவட்டத்தில் சித்தராமையா பெயர் பிரபலமானது. பிறகு, ஆளும் ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ராமகிருஷ்ண ஹெக்டே அமைச்சரவையில் பட்டு வளர்ச்சித் துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார். 1985-இல் நடைபெற்ற சட்டப்பேரவை மறுதேர்தலில் ஜனதா கட்சி சார்பில் வென்று, ராமகிருஷ்ண ஹெக்டே அமைச்சரவையில் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

  இது தவிர, போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்த அனுபவம் கொண்டவர். 1994-இல் ஜனதா தள கட்சியின் சார்பில் வென்று துணை முதல்வர் பொறுப்பை வகித்தார்.

  1999 - 2004 வரை கர்நாடக ஜனதா தள கட்சித் தலைவராக இருந்தார். 2004-இல் மீண்டும் வென்று தரம்சிங் தலைமையிலான காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் மீண்டும் துணை முதல்வராகப் பதவியேற்றார். நிதி பொறுப்பை வகித்து 6 பட்ஜெட்களை தாக்கல் செய்தார். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சித்தராமையா, தன்னை முதலமைச்சர் பதவியில் அமர்த்தாததால் தேவகெüடாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மஜதவில் இருந்து விலகி அகில இந்திய மக்கள் ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினார்.

  2006-இல் சித்தராமையா, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். 2009-ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். அரசியல் அனுபவமும், பேச்சாற்றலும், அரசியல் சாதுர்யமும் கொண்ட சித்தராமையாவால் மட்டுமே, 2014-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்களில் வெற்றிபெற உதவ முடியும் என்பது பரவலாக கட்சியில் நிலவும் கருத்து. எனவே, சித்தராமையாவை முதலமைச்சராக்கும்படி அவரது ஆதரவாளர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

  "120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது': பெங்களூரில் தனது இல்லத்தில் வியாழக்கிழமை தன்னைச் சந்திக்க வந்த தலைவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறியது: கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் நான் முன்னணியில் இருக்கிறேன். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எனக்கிருகிறது. முதலமைச்சராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்தறிய, கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் பெங்களூருக்கு வருகை தரவுள்ளனர். நான் தில்லி செல்லவில்லை. முதலமைச்சர் பதவிக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் பெயரை கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு மேலிடப் பார்வையாளர்கள் கொண்டு செல்வார்கள். அதன் மீது கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai