பெருந்துறை அருகே மினி லாரி-கார் மோதிய விபத்தில் தொழில்அதிபர், அவரது மகள் உள்பட மூவர் இறந்தனர். இதில் படுகாயம் அடைந்த தொழில்அதிபரின் மனைவி உள்பட 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னிவலசை சேர்ந்தவர் ரவீந்திரன் (49). பெருந்துறை, குன்னத்தூரில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திலகவதி (40). இத்தம்பதியினரின் மகள் குழலினி (18). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.குழலினிக்கு குடல் இறக்கம் இருந்ததால் அதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்காக பெருந்துறையில் இருந்து ரவீந்திரன், திலகவதி, குழலினி, திலகவதியின் அக்கா துளசிமணி (42), அவரது மகள் கௌசிக் பிரபா ஆகியோர் ஒரே காரில் கோவைக்கு இன்று மதியம் சென்றனர். காரை ரவீந்திரன் ஓட்டிச்சென்றார்.
ஓட்டுநர் இருக்கைக்கு அருகே உள்ள முன்இருக்கையில் குழலினியும், பின் இருக்கைகளில் திலகவதி, துளசிமணி ஆகியோரும் அமர்ந்திருந்தனர். பெருந்துறையை அடுத்த கராண்டிபாளையம் அருகே சென்றபோது முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல ரவீந்திரன் முயன்றாராம்.அப்போது நிலைதடுமாறிய கார், எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவ இடத்திலேயே ரவீந்திரன், குழலினி, துளசிமணி ஆகியோர் இறந்தனர். படுகாயம் அடைந்த திலகவதி, கௌசிக் பிரபா ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மினிலாரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆயில் பாரத்தை ஏற்றிக்கொண்டு சென்னிமலைக்கு வந்தது. இந்த விபத்தில் மினிலாரியை ஓட்டி வந்த பாபுக்கு கால் முறிந்தது. அவருக்கும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பம் தொடர்பாக பெருந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.