Enable Javscript for better performance
பத்தாம் ஆண்டில் தமிழ் விக்கிபீடியா: செப்.29ல் சென்னையில் பங்களிப்பாளர் கூட்டம் - Dinamani

சுடச்சுட

  

  பத்தாம் ஆண்டில் தமிழ் விக்கிபீடியா: செப்.29ல் சென்னையில் பங்களிப்பாளர் கூட்டம்

  Published on : 24th September 2013 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Tamil_Wikipedia_stamp_2013_-_sample4

  கட்டற்ற இணையக் களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியா பத்து ஆண்டுகளைத் தொடுகின்றது. பல்வேறு தமிழ் ஆர்வலர்களின் கூட்டுழைப்பில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுவரும் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் இம்மாதம் 29 நாள் சென்னையில் கூடுகிறார்கள்.

  உலகளாவிய இணைய வலையில் மனித அறிவு முழுமையையும் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகக் குவிக்கும் நோக்கத்தோடு இயங்கும் தன்னார்வத் திட்டம் விக்கிப்பீடியாவாகும். அதன் தமிழ் பதிப்பு 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் தொடங்கப்பெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகப் பல நாடுகளிலும் இருந்து இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் சென்னையில் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஒன்றுகூட இருக்கிறார்கள். பத்துக்கும் குறைவான பங்களிப்பாளர்களில் இருந்து படிப்படியாக வளர்ந்து 300 தொடர்பங்களிப்பாளர்களை எட்டியுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களைக் கொண்ட (சரிபார்க்க வேண்டும்) 55,745 கட்டுரைகள் உள்ளன. ஒப்பீட்டளவில் தமிழ் இணைய உலகில் மிகப்பெரிய கூட்டாக்கத் திட்டமாகவும் பல தர அளவீடுகளில் இந்திய விக்கிப்பீடியாக்களில் முதல் இரண்டு இடங்களிலும் வந்து ஒரு முன்மாதிரித் திட்டமாக நிற்கிறது.

  பல நாடுகளிலும் இருந்து பல துறைகளையும் சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் எழுதி வருகிறார்கள். நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியா படிக்கப்படுகிறது. பல இணையத் தளங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவை மேற்கோள் காட்டுகின்றனர். சில பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் உலவி தாங்கள் கற்கும் அறிவியல், வரலாறு, புவியியல், கணக்கு போன்ற பாடங்கள் சார்ந்து இன்னும் கூடுதல் தகவல்களைப்பெறவும் தங்கள் பொது அறிவினைப் பெருக்கிக் கொள்ளவும் மாணவர்களுக்குத் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சியும் தாக்கமும் பெற்றிருந்தாலும் நமது தமிழ் விக்கிப்பீடியாவின் வளரச்சி பல ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் மிகக் குறைவே. அம்மொழிகளில் பல இலட்சம் கட்டுரைகள் உள்ளன. தமிழர்களைவிட மக்கள்தொகையில் குறைவாக உள்ள சில மொழி விக்கிப்பீடியாக்களும்கூட நன்கு வளர்ந்துள்ளன. எட்டு கோடி தமிழர் மக்கள்தொகையில் 300 பேர் மட்டும் எழுதி இவ்வளர்ச்சியைப் பெற்றிருக்கும்போது இன்னும் சில ஆயிரம் பங்களிப்பாளர்களாவது தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் முன்னணியில் நிற்க முடியும். எடுத்துக்காட்டாக ஆங்கில விக்கிப்பீடியாவில் தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடர் பங்களிப்பாளர்கள் உள்ளனர். அவர்களின் கூட்டுழைப்பினால் அங்கு 43 இலட்சுத்துக்கும் கூடுதலான கட்டுரைகள் உள்ளன.

  அறிவை முதன்மையாகக் கொண்டு இயங்கும் உலகில் தமிழர்களின் அறிவுத் தேடலுக்கு அடிப்படையாக அமையக்கூடிய தமிழ் விக்கிப்பீடியாவை நன்கு வளர்த்தெடுப்பது இன்றியமையாதது. இந்தப் பத்தாண்டு நிறைவுவிழாவின்போது இந்த நோக்கில் உரையாடி தேவையான திட்டங்களைத் தீட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவரையும் தமிழ் விக்கிச் சமூகம் வரவேற்கிறது.

  தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல் நிகழ்வு பற்றிய தகவல்கள் பின்வரும் பக்கங்களில் உள்ளன.

  https://ta.wikipedia.org/s/36sk

  https://ta.wikipedia.org/s/38hf (அதே பக்கம் ஆங்கிலத்தில்)

  அழைப்பிதழ் படிமம் https://upload.wikimedia.org/wikipedia/ta/9/9a/Tamil_Wiki_Invitation_3.png என்ற இணையப் பக்கத்தில் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai