தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் 463 புதிய பேருந்துகள் மற்றும் 39 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 502 பேருந்துகளை இன்று முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து பேருந்துகளின் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார்.
இதே போல் போக்கு வரத்து துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு பணிமனை, புதிய கட்டிடங்கள், பகுதி அலுவலகங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
பள்ளி மாணவ– மாணவிகளுக்கு கட்டண மில்லா கையடக்க பஸ் பயண அட்டைகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் ரூ.95.55 லட்சம் செலவில் குரோம்பேட்டை கூடுதல் பஸ் கூண்டு கட்டும் பிரிவு கட்டப்பட்டுள்ளது. இது தவிர ரூ.98.50 லட்சம் செலவில் திருநெல்வேலி கோட்டம் புதிய கூட்டாண்மை அலுவலகம், கொடிமுடி அன்னூர், புதிய பணிமனை, பொள்ளாச்சியில் கூடுதல் பேருந்து கூண்டு கட்டும் பிரிவு, துவரங்குறிச்சி பணிமனை, புதிய ஊழியர் ஓய்வறை, உணவகம், நன்னிலம் பணிமனை, புதிய ஊழியர் ஓய்வறை கட்டப்படட்டுள்ளது. இந்த புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
பண்ருட்டி, செஞ்சி, ஆம்பூர், திருத்துறைப்பூண்டி, லால்குடி ஆகிய 5 புதிய பகுதி அலுவலகங்களை திறந்ததுடன், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறைக்கு தேர்வான 9 பேர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
கருணை அடிப்படையில் வாரிசுதாரர் 10 பேர்களுக்கு பணி நியமன ஆணை ஆகியவற்றையும் ஜெயலலிதா வழங்கினார்.
6 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 5 பகுதி அலுவலகங்களுக்கு புதிய ஜீப்புகள் ஆகியவற்றை வழங்கினார். ரூ.15 கோடி செலவில் கும்மிடிப்பூண்டியில் சர்வதேச தரத்திற்கு இணையாக உறை விடத்துடன் கூடிய ஓட்டுனர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.