ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கொலைச் சம்பவ வழக்கில் கொலையாளிகள் 3 பேர் புதன் கிழமை கைதாகி, சிறையி்ல் அடைக்கப்பட்டனர்.
கமுதி காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்தது ராமசாமி பட்டி. இவ்வூரை அடுத்து விருதுநகர் மாவட்டம், பரளச்சி காவல் நிலையச் சரகத்தைச் சேர்ந்த மேல பாறைக்குளம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சந்திர சேகர்(எ)சேகர்(35) என்பவர், காதர்பாட்சா(24) என்பவருடன் ராசாமிபட்டிக்கு வந்து தெருவில் ரகளை செய்தாராம். இதைக் கண்டித்த குருசாமி மகன், மீன் வியாபாரி செல்வராஜ்(37) என்பவரை இருவரும் வெட்டி விட்டு ஓடியபோது, செல்வராஜ் மற்றும் இவரது தரப்பினர் விரட்டிச் சென்று 2 பேரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த சேகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றிய செய்தி தின மணியி்ல் ஏற்கனவே பிரசுரமானது. இரு தாக்குதல் சம்பவங்கள் குறித்து கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன் உத்தரவில் காவல் நிலைய ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் அப்துல்லா, மாணிக்கம் ஆகியோர் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தலைமறைவான கொலையாளிகளை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், சார்பு ஆய்வாளர்கள் செல்வராஜ், மாணிக்கம் ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படையினர் தேடி வந்தனர். இதில் கோபாலன் மகன் ஜெயராமன்(25), குப்புச்சாமி மகன் கோவிந்தன்(42), சோலைச்சாமி மகன் சோலைராஜ்(39) ஆகியோரையும் செல்வராஜை வெட்டியதாக காதர்பாட்சாவையும் தனி போலீஸ் படையினர் கைது செய்து, கமுதி நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர்.
நால்வரையும் 15 நாள் காவலில் வைக்கும் படி குற்றவியல் நடுவர் எஸ்.கணபதி சாமி உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள மற்ற கொலையாளிகளை தனி போலீஸ் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.