குற்றாலத்தில் அருவி நீர் மாசடையாமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பும், அதிருப்தியும் உள்ளது.
அருவி தடாகத்தில் துணி துவைக்க வந்தோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். தடாகத்தின் 4 பக்கத்திலும் கயிறு கட்டி தடை விதிக்கப்பட்டது.
அதே போல் சாலை ஓரங்களில் யாரேனும் மதுபானங்கள் குடிக்கிறார்களா? என்பதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இந்த நடவடிக்கைகளுக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு அளித்தனர்.
அதே சமயம், குற்றாலத்தில் புதன்கிழமை முதல் எண்ணை குளியல், தடாகத்தில் துணி துவைத்து, சோப்பு, ஷாம்பு பயன்படுத்துதல், மது குடித்து குளிக்க வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடை விதித்தனர்.
மேலும், அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் விற்பனையும் தடை செய்யப்பட்டது.
ஆயில் மஸாஜ் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், ஆயில் மஸாஜ் செய்வதற்கு என்றே வந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
இது மட்டும் அல்லாமல், ஆயில் மஸாஜ் தொழிலை செய்து வந்த 30க்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். பல தலைமுறை தலைமுறையாக செய்து வந்த வேலை தற்போது இல்லாமல் போனதால் பல குடும்பங்கள் செய்வதறியாது தவிக்கிறார்கள்.