கொடைக்கானலில் மரங்கள் வெட்டப்பட்ட வனப் பகுதியை சர்வே எடுப்பதற்கு, வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட சுமார் 125 மரங்களை, ஒரு கும்பல் வெட்டிக் கடத்தியது. இதி தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட வனப் பாதுகாவலர் ஆகாஸ்பர்வா தலைமையில், வனத் துறையினர் சம்பவ இடங்களைப் பார்வையிட்டு, அனுமதியில்லாமல் மரங்களை வெட்டிக் கடத்திய சத்தீயசீலன், நாகராஜ், பழனிச்சாமி, வேலுச்சாமி, குமார், ராகவன், வினோத்குமார், மகேந்திரன், ரமேஷ் ஆகியோருக்கு ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மரங்கள் வெட்டியது தொடர்பாக, கொடைக்கானல், அடுக்கம் ஆகிய வன வட்டத்தில் பணிபுரிந்த வனத் துறையினர்களிடமும், வனத் துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, கொடைக்கானல் வன அலுவலர் வெங்கடேஷ் புதன்கிழமை கூறியது: கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியில் மரங்களை வெட்டிக் கடத்திய கும்பல்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரகாசபுரம் வனப் பகுதியில் குறைந்த அளவு வனத் துறையினரே பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரங்களை வெட்டும் கும்பல்கள் அதிகமாக இருந்ததால், அவர்களை வனத் துறையினரால் தடுக்க முடியவில்லை.
இருப்பினும், சம்பவ இடத்தில் பணிபுரிந்த வனத் துறையினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டியுள்ளனரா அல்லது வேறு இடத்தில் வெட்டியுள்ளனரா என்பது குறித்து நிலத்தை ஆய்வு செய்வதற்கு, கொடைக்கானல் வட்டாட்சியருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் சர்வேயர் மூலம் இடத்தை ஆய்வு செய்து, எந்தப் பகுதியில் மரங்களை வெட்டியுள்ளனர் என்பது குறித்து விரிவான தகவல் தெரிவிப்பர். இருப்பினும், அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டிய கும்பல்கள் மீதும், அவற்றுக்கு துணையாக இருந்த அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.