கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூலை 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக என்எல்சியில் நிலக்கரி ஏற்றும் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நெய்வேலி என்எல்சியில் இருந்து சிமென்ட் ஆலைகளுக்கு நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வாடகை உயர்வு உள்ளிட்ட கேரிக்கையை முன்வைத்து லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு நல சங்கத்தினர் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் வியாழக்கிழமை 11வது நாளாக நீடித்தது.
இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் மந்தாரக்குப்பத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு துணைதலைவர் சந்திரன், துணை செயலர் மேத்யூஸ், மாநில இணை செயலர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து சம்மேளன தலைவர் சுகுமார் கூறியது, எங்களது வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக மாநில லாரிகள் சேர்ந்துள்ளன. வரும் ஜூலை 2ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சாகும் வரையி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளோம்.
எங்களது போராட்டத்தை அடக்கும் விதமாக கைது நடவடிக்கையை மேற்கொண்டால், நெய்வேலியில் உள்ள அனைத்து லாரிகள் மற்றும் அவற்றின் உரிமங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.