விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை மாலை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதில் காயமுற்ற ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்ததையடுத்து சாவு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இது தொடர்பாக போலீஸார் ஆலையின் போர்மேனைக் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள உரிமையாளரைத் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியை அடுத்துள்ள வேண்டுராயபுரம் கிராமத்தில் முன்னா பயர் ஒர்க்ஸ் உள்ளது. இந்த தொழிற்சாலையை சிவகாசி, தேவர் தெருவைச் சேர்ந்த ஜெயராம் மகன் வைரமுத்துகுமார் (45) என்பவர் நடத்தி வருகிறார். இதில் சுமார் 150 தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு தொழிற்சாலையில் ஒரு அறையில் வேலையை முடித்துவிட்டு மணி மருந்தை ஒதுக்கும் போது உராய்வு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த அறை தரைமட்டமானது.
அதில் வேலை செய்து கொண்டிருந்த திருத்தங்கல், விக்டர் மகன் முனியசாமி (30) என்பவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அந்த அறையின் இடிபாடுகளில் சிக்கி திருத்தங்கல், சந்தனம் மகன் அல்போன்ஸ் (55) என்பவர் உயிரிழந்தார். மேலும் அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த கூமாப்பட்டி, துரைச்சாமி என்பவர் மகன் கோவிந்தபாபு (19) 100 சதவீதம் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து சாவு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
இது குறித்து மல்லி காவல் நிலையத்தில், வேண்டுராயபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்மாயன் புகார் செய்தார். புகாரில், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன மூலப்பொருட்கள் எளிதில் தீப்பற்றக்கூடியதும், வெடிக்கக்கூடியதும் என்று தெரிந்தும் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தேவையான வெடி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் ஆலையில் உரிமையாளர் வைரமுத்து மற்றும் போர்மேன் ராஜசேகர் ஆகியோர் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாகவும், அதனால் வெடி பொருட்கள் உராய்ந்து தீப்பற்றி வெடித்து சிதறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து போர்மேன் ராஜசேகரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் வைரமுத்துகுமாரைத் தேடி வருகிறார்கள்.