மு.க.அழகிரி பெயரில் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோயில் நிலம் மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம், விவசாய சங்கத் தலைவரான இவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.அந்த மனுவில், சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை மூலம் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டியுள்ளார். 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கல்லூரிக்கு பல்வேறு முறைகேடுகள் மூலம் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான 44 செண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மு.க.அழகிரி 2011–ம் ஆண்டு கிரைய பத்திரம் போட்டுள்ளார். அரசு நிலத்தை ஆக்கிரமித்தது குற்றச்செயலாகும்.எனவே மு.க.அழகிரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.
இதனையடுத்து மு.க.அழகிரி மகனுக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அழகிரி பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட இடம் கோயிலுக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து அந்த இடம் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக மு.க.அழகிரி, சம்பத்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.