திருப்பூர் பொல்லிக்காளிபாளையம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 17 பேர் காயமடைந்தனர்.
பழனியில் இருந்து திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிர்திசையில் வந்துகொண்டிருந்த சரக்கு லாரியும், திருப்பூர் அருகே தாராபுரம் சாலை, பொல்லிக்காளிபாளையம் பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பழனியைச் சேர்ந்த ராமலட்சுமி (72) சம்பவ இடத்திலேயே இறந்தார். பேருந்து ஓட்டுநரான பழனியைச் சேர்ந்த தங்கவேல் (52), புதுப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காளியப்பன் (48), பயணிகளில் 9 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவிநாசிபாளையம் போலீஸார், விபத்தில் படுகாயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இதில், அரசுப் பேருந்து ஓட்டுநர் தங்கவேல் உள்பட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.